Tuesday, July 27, 2010

புளியங்குடியில் மள்ளர் வரலாற்று முழக்க பொதுக்கூட்டம்

புளியங்குடி : புளியங்குடியில் மள்ளர் வரலாற்று முழக்க பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் டாக்டர் துரையப்பா தலைமை வகித்தார். உமர் செரிப் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஞானசேகரன், தங்கராஜ், புரட்சி கவிதாசன், டாக்டர் ராஜதுரை, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சிவஜெயபிரகாஷ், எட்வர்டு ராஜன், கோவிந்தசாமி வாழ்த்துரை வழங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- பட்டியலினத்தில் உள்ள 76 சாதி பெயர்களில் மள்ளர், பள்ளன், குடும்பன், மூப்பன், காலாடி, மண்ணாடி, தேவேந்திரகுலத்தான், கடையர், பலகான், பணிக்கர், வயற்தாரர், வாதியார் ஆகியவற்றை மள்ளர் என்ற தலைப்பின் கீழ் கொண்டு வந்து பொதுப்பெயரில் அழைக்க ஆணையிடுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள இந்து அறநிலைய துறையின் கீழ் உள்ள கோயில்களில் நிலங்களில் நன்செய் நிலங்களின் ஆவணங்களின் படி மள்ளர்களுக்கு பயிரிடும் உரிமை உள்ளவையாகும். இவற்றை தற்போது ஆதிக்கமாக கையகப்படுத்தி உள்ளோரிடமிருந்து மீட்டு மீண்டும் மள்ளர்களுக்கே வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டது. சங்க இலக்கிய புறநானூறு 77,78,79ன் படி மள்ளர்களே மூவேந்தர் என்பதை தமிழக வரலாற்று துறையின் ஆவணங்களில் வெளியிட கேட்டுக் கொள்ளப்பட்டது.

மள்ளர் இனமக்களுக்கு மாறியவர்களுக்கு சேர்த்து உள் ஒதுக்கீடு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மள்ளர்களை தலித், ஆதிதிராவிடர், தாழ்த்தப்பட்டோர் என்று அழைத்து பேசுவதை, எழுதுவதை தடை செய்ய ஆணையிட வேண்டும். ஆண்டுதோறும் சித்திரை திங்கள் முழு நிலவு நாளை மள்ளர்களின் இந்திர விழாவாக அரசு நடத்த வேண்டும்.
மள்ளர்களின் உழவு தொழிலை சிறப்பித்து வெளிப்படுத்த அனைத்து பள்ளு இலங்கியங்கள், தல புராணங்கள் கண்டெடுத்து செம்மொழி திட்டத்தின் கீழ் புதுப்பித்து வெளியிட வேண்டும்.

சாதி வேற்றுமையை தவிர்த்திட ஒற்றுமையை மேம்படுத்த விடுதலை போராட்டத்தில் இணைந்து செயல்பட்டவர்களுக்கு சிலை நிறுவும் போது தனித்தனியே வைக்காமல் ஒன்று சேர்த்து அரசு சார்பில் சிலைகளை நிறுவ வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாணவரணி செல்வகுமார் நன்றி கூறினார்.

No comments: