Saturday, July 31, 2010

நுகர்வோர்

புதுடில்லி: நீங்கள் வாங்கும் பொருளுக்கு கடைக்காரர் ரசீது தரவில்லையா? அப்படி என்றால் அவர் மீது நீங்கள் வழக்கு தொடுத்து அதற்கு இழப்பீடு பெறலாம். ஆம்... நுகர்வோர் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள திருத்தங்கள் இது போன்று பல்வேறு உரிமைகளை நுகர்வோருக்கு வழங்குகிறது. தற்போது நாடு முழுவதும் நுகர்வோரிடம் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. முறையற்ற வணிக நடவடிக்கைகளை எதிர்த்து நுகர்வோர் கோர்ட்டுக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போதைய ஆவணங்களின் படி, 35 நுகர்வோர் இழப்பீட்டுத் தீர்ப்பாணையங்கள் மாநில அளவிலும், 627 நுகர்வோர் அமைப்புகள் மாவட்ட அளவிலும், தேசிய அளவில் ஒரு கமிஷனும் இயங்குகின்றன. இந்த ஆண்டு ஏப்., வரை 34 லட்சம் நுகர்வோர் வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 30 லட்சம் வழக்குகள் தீர்க்கப்பட்டு விட்டன. அதிகரித்து வரும் வழக்குகளைக் கருத்தில் கொண்டு "நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-1986' சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திருத்தங்கள் நுகர்வோருக்குத் தரமான பொருட்கள், உரிய விலையில் கிடைக்கவும், நுகர்வோரின் உரிமைகளை அதிகரிக்கவும் துணை செய்யும். சட்டத் திருத்தம் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில், நீங்கள் வாங்கிய பொருளுக்கு கடைக்காரர் ரசீது தரவில்லையென்றால், அது குற்றமாகக் கருதப்படும். ஒவ்வொரு ரசீதும் நுகர்வோரை நம்பகமான வாடிக்கையாளராக உருவாக்குகிறது. அது தரப்படாவிட்டால் அந்த வியாபாரம், "முறையற்ற வணிக நடவடிக்கை'யாக கருதப்படும். அதேபோல் நுகர்வோர் வாங்கும் பொருள் பற்றிய அனைத்து விவரங்களையும் கடைக்காரர் நுகர்வோருக்குத் தெரிவிக்க வேண்டும். அவ்விதம் தெரிவிக்காமல் இருந்தால் அல்லது மறுத்தால் அதுவும் குற்றமாகக் கருதப்படும். மேலும், நுகர்வோர் கோர்ட் நடைமுறைகளான அதிகாரிகள் தேர்வு, வழக்குகளைத் தேர்வு செய்தல் அல்லது தள்ளுபடி செய்தல் போன்றவற்றில் வெளிப்படையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நுகர்வோர், இணையதளம் மூலம் தங்கள் வழக்குகளைப் பதிவு செய்திடவும் இத்திருத்தம் வழி வகுக்கும். நீண்ட நாளாக நடக்கும் வழக்குகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க, நுகர்வோர் கோர்ட்டுக்கு அதிகாரம் வழங்கப்படும். தீர்ப்பு வழங்கப்பட்ட பின் ஆவணங்களில் ஏதேனும் தவறு கண்டுபிடிக்கப்பட்டால், மாநில நுகர்வோர் கமிஷன்கள், தங்கள் தீர்ப்புகளை மாற்றிக் கொள்ள கூடுதல் அதிகாரம் வழங்கப்படும். அதே போல், நுகர்வோருக்கு இழப்பீடு வழங்கும் தீர்ப்பாணையங்கள் மாவட்ட, மாநில மற்றும் மத்திய அளவில் அமைக்கப்படும்.

No comments: