Wednesday, July 28, 2010

குழந்தைப்பருவ தேவேந்திரர் இயக்கம் -கோ.ரகுபதி

இந்து சமூக அமைப்பினால் தீண்டாமை உட்பட பல்வேறு வகையான ஒடுக்குமுறைக்கு உள்ளானோர்களில்பள்ளர், குடும்பர், தேவேந்திரர், மள்ளர் என பல பெயர்களில் அழைக்கப்படும் சாதியின ரும் அடங்குவர்.தீண்டாமை உட்பட பல்வேறு சமூக ஒடுக்குமுறை குறித்து குறிப்பிடத்தக்க அளவிற்குவிவாதிக்கப்பட்டிருக்கிற காரணத்தி னால் பள்ளர்கள் (இனி, தேவேந்திரர்கள்) மீதான ஒடுக்குமுறையை இங்குவிவாதிப்பதனை தவிர்த்துவிட்டு ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கான இயக்கங்களைத் தோற்றுவித்தல்,அவற்றின் கருத்தியல் மற்றும் போராட்டம் இவற்றினை குறித்து விவாதிக்கலாம். சாதி அமைப்பு, தீண்டாமைமற்றும் சமூக ஒடுக்குமுறையினை இந்து மத கருத்தியல் நியாயப்படுத்துகின்ற காரணத்தினால் அதனைஒழிப் பதை இயல்பாக தன்னகத்தே தலித் இயக்கம் கொண்டிருக்கிறது என்ற எண்ணமேமேலோங்கியிருக்கிறது. உண்மையில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளான தலித் சாதிகளின் அனைத்துஇயக்கங்களும் இந்து மதம் மற்றும் சாதி ஒழிப்பு, இந்து மதத்திற்கு எதிரான மாற்று மதத்தினைதோற்றுவித்தல் என்ற இலக்குகளை கொண்டிருந்தன என்று கூறிவிட முடியாது. அவ்வாறென்றால்அவ்வியக்கங்கள் இருக்கின்ற அமைப்புமுறையினை அவ்வாறே ஏற்றுக்கொண்டனவா என்ற கேள்வியும்எழுகிறது. தேவேந்திரர் சாதியின் இயக்கச் செயல்பாடுகளை ஆராய்ச்சிக்குட்படுத்தினால் அவ்வியக்கம் சாதிஒழிப்பு, இந்துமதத்திற்கு எதிரான மாற்று மதம், இந்துமத ஒழிப்பு இவற்றினை இலக்காகக்கொண்டிருக்காததைக் காண முடிகிறது. இதனால் அவ்வியக்கம் ஏற்றத்தாழ்வினை வலியுறுத்து கின்ற- இந்துசாதி படிநிலை அமைப்பில் தனக்கொரு மேலான நிலை யினைக் கோரியது என்றோ அல்லதுசமூகவியலாளர் எம்.என். ஸ்ரீனிவாஸ் வார்த்தையில் ''சமஸ்கிருதமயமாக்கம்'' நிலைபாட்டினைக்கொண்டிருந்தது என்றோ கூறுவதும் இயலாது.




இயக்கம்: தோற்றக் காரணி, தலைமை & பங்கேற்பு



வர்க்க முரண், சமூக ஒடுக்குமுறை போன்ற காரணிகளே சமூக இயக்கங்கள் உருவானதற்கான அடிப்படைஎன்று சமூகவியலா ளர்கள் கருதுகின்றனர். பறையர், அருந்ததியர் போன்ற சாதியினர் அனு பவித்து வந்தஅதே ஒடுக்குமுறையினை தேவேந்திரர்களும் அனு பவித்து வந்ததே தேவேந்திரர் இயக்கங்கள்உருவாவதற்கான அடிப்படைக் காரணியாகும். காலனியாட்சிக் காலத்தில் தேவேந்திரர்கள் சுமார் 10அமைப்புகளின் கீழ் திரண்டிருந்தனர். இவை மாவட்டத்திற்குள் ளேயே செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஒரேமாவட்டத்திற்குள் ஒன்றிற்கு மேற்பட்ட அமைப்புகளும் இருந்தன. ஏன் தேவேந்திரர்கள் ஒரே குடை யின் கீழ்ஒன்று சேர்ந்திருக்கவில்லை என்ற கேள்விக்கு சில விடை களைக் காணலாம்.

விவசாயம் என்ற ஒரே தொழிலினைச் செய்தபோதிலும் தேவேந்திரர் களிடத்தில் ஆத்தா, அம்மா, அஞ்ஞா எனபல உட்பிரிவுகள் உண்டு. நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு (பள்ளர்) வகையை எண்ண இயலாதுஎன்ற சொலவு புழக்கத்தில் இருப்பதிலிருந்து தேவேந்திரர் களிடம் இருக்கின்ற உட்பிரிவுகளை புரிந்துகொள்ளலாம். ஒரு உட்பிரிவு மற்றொரு உட்பிரிவினரோடு திருமண உறவினை மேற்கொள்வ தில்லை.மட்டுமின்றி இந்த உட்பிரிவிற்குள் ஏற்றத்தாழ்வான கருத்தியல் கள், பாகுபாடு மற்றும் வட்டார வேறுபாடுபோன்றவை மிக ஆழமாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தன. இது அவர்களை ஒரே குடையின் கீழ்அணிதிரள்வதைத் தடுத்தது, அவரவர் சார்ந்த உட்சாதிகளின் அமைப்பு களிலேயே இணைந்திருந்தனர்.அமைப்புகளின் தலைமைத்துவத்தினை நோக்கும் பொழுது அவர்கள் பங்கேற்பாளர்களைவிடவும்கல்வித்தகுதி, பொருளாதாரத்தில் சற்று முன்னேறியிருந்திருப்பதைக் காணமுடிகிறது. பங்கேற்பாளர்கள்பெரும் பாலும் பண்ணை அடிமைகளாகவும், கூலிகளாகவும் இருந்திருக்கின்ற னர். இவ்வமைப்புகள்பெரும்பாலும் கிராமப்புறங்களில்தான் செயல் பட்டிருக்கின்றன.அதேசமயம் நகரத்தோடு தொடர்பு வைத்திருந்தன. பல அமைப்புகள் குறுகிய காலம் மட்டுமே செயல்பட்டிருக்கின்றன, நீண்ட காலம் செயல்பட்டஅமைப்புகள் அரிதாகவே இருந்திருக்கின்றன. தேவேந்திரர்கள் உட்சாதி அடிப்படையில் வெவ்வேறுஅமைப்புகளில் ஒருங்கிணைந்திருந்த போதிலும் அவர்களின் கோரிக்கை ஒன்றாகவே இருந்திருக்கின்றன.

அமைப்புகள் & மாநாடுகள்

ஆவணக் காப்பகம் மற்றும் கள ஆய்வில் சேகரித்தத் தரவுகளிலிருந்து காலனியாட்சிக் காலத்தில்தேவேந்திரர்களுக்கென சுமார் 10 சங்கங்கள் செயல்பட்டிருப்பதனை அறியமுடிகிறது. இராமநாதபுரம்மாவட்டம் பேரையூரில் பெருமாள் பீற்றர் தலைமையில் இயங்கிய சங்கம்தான் தேவேந்திரர்களின் முதல்சங்கம் என்று இதுவரை நிலவிவந்த வரலாறு தவறானது என்பதை ஆவணக் காப்பகத்தில் சேகரிக்கப்பட்டஆதாரத் திலிருந்து அறிந்து கொள்ளமுடிகிறது. இந்த ஆதாரம் பெருமாள் பீற்ற ருக்கு முன்னரேதேவேந்திரர்கள் மாநாடு நடத்தியிருக்கின்றனர் என்பதனை தெரிவிக்கிறது. திருச்சிராப்பள்ளிஸ்ரீராமசமுத்திரத்தில் 1922ம் ஆண்டு மே மாதம் 20 - 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற திருச்சி ஜில்லாஉழவர்குல மாநாடுதான் தேவேந்திரர்களின் முதல் மாநாடு ஆகும்.1 இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 21தீர்மானங்க ளில் அவர்களுக்கென அமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டும் என்ற தீர்மான மும் அடங்கும்ஆனால் மாநாடு நிறைவுற்ற பின்னர் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. மேலும் அமைப்பும்உருவாக்கப்பட்டி ருக்கவில்லை. மூன்றாண்டுகளுக்குப் பின்னர் 1925ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியில் ஒருமாநாடும்2, 1931ம் ஆண்டும் மீண்டும் ஒரு மாநாடும்3 திருச்சிராப்பள்ளியில் தேவேந்திரர்கள்நடத்தியிருக்கின்றனர். இந்த மூன்று மாநாடுகளை நடத்தியவர்களுக்கு இடையே தொடர்பு இருந் தது அல்லதுஇல்லை என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் 1922 மற்றும் 1925ம் ஆண்டுகளிலும் 1931ம்ஆண்டிலும் நடைபெற்ற மாநாட்டினை ஒருங்கிணைத்தவர்கள் முறையே தேவேந்தி ரர்களில் மூப்பன் மற்றும்தேவேந்திரர் என்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்ற முடிவு செய்யலாம். காரணம் அவர்கள் தங்கள்பெயர்களின் பின்னொட்டாக மூப்பன், தேவேந்திரர் என்ற உட்சாதி பெயரினையும் சேர்த்திருக்கின்றனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் பருத்திக்கோட்டை மற்றும் ராசவேலுக்குடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளர்கள் ஒருமாநாட்டை 23 மார்ச் 1936 தேளூரில் நடத்தியிருக்கின்றனர்.4 இவர்கள் எந்த உட்சாதி யினைச் சேர்ந்தவர்கள்என அறிந்து கொள்ள இயலவில்லை. 1920 களில் சேலம் பகுதியில் ஒரு சங்கம் இருந்திருக்கிறது.5பண்ணாடி என்ற தேவேந்திரர் உட்சாதியினரால் அச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தவிரவேறு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தென்தமிழகமான திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம்,மதுரை, தேனி மாவட்டங்களில் சுமார் ஏழு அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின் றன. 1922 ஆகஸ்டில்பெருமாள் பீற்றரால் தொடங்கப்பட்ட பூவைசிய இந்திரகுல சங்கம் காலனியாட்சிக் காலத்தில் நீண்டகாலம்செயல்பட்ட இயக்கமாகும்.6 இதே மாவட்டத்தில் தேவேந்திரகுல மகாஜன சபா சார்பில் 20-21 ஜூன் 1925ல்ஒரு மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது.7 பூவைசிய இந்திரகுலம் மற்றும் தேவேந்திரகுலம் என்ற வெவ்வேறுபெயர்களில் ஆனால் ஒரே மாவட்டத்திற்குள் இரண்டு சங்கங்கள் செயல் பட்டிருப்பதிலிருந்து தேவேந்திரர்கள் உட்சாதி அடிப்படையிலேயேதான் ஒருங்கிணைந்திருக்கின்றனர் என்ற முடிவினை மேலும் வலுப்படுத்துகிறது. திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் (இப்பகுதி அன்றைய காலத்தில் திருவாங்கூர்சமஸ்தானத்தின் எல்கைக்குள் இருந்தது) பாண்டியர் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பினை 1924ம்ஆண்டு தோற்றுவித்து செங்கோட்டை தாலுகா அளவிலேயே செயல்பட்டிருக்கின் றனர்.8 1946ம் ஆண்டுஒருமாநாடு நடத்தியதைத் தவிர அந்த அமைப் பின் இதர செயல்பாடு குறித்த எந்தத் தரவும் இல்லை.திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் இந்திரகுலாதிப வேளாளர் அய்க்கிய சங்கம் 1933ல் ஆரம்பிக்கப்பட்டுஅதற்கென தெளிவான அமைப்புவிதிகள் உருவாக்கப் பட்டிருந்த போதிலும் அச்சங்கம்செயல்பட்டிருக்கவில்லை.9 தேனி பகுதி யில் தேவேந்திரகுல வேளாளர் சங்கம் என்ற ஒரு அமைப்புஇருந்திருக் கிறது. இதன் தலைவராக இருந்த பாலசுந்தரராசு தேவேந்திரர்கள் மீதான ஒடுக்குமுறைக்குஎதிரான பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.10 சமத்துவத்துவம் கோரி கேரளாவில் நடைபெற்றபோராட்டத்தினால் ஈர்க்கப்பெற்ற கம்பம் பகுதி தேவேந்திரர்கள் சமத்துவம் கோரி போராடி னர், ஆனால்அவர்கள் அமைப்பு எதுவும் தொடங்கியிருக்கவில்லை”

இலக்கும் செயல்பாடும்

ஒரு சமூக இயக்கத்தின் இலக்கு என்பது 1) அவ்வியக்கம் ஒருங்கிணைக் கின்ற மக்களின் சமூகப்பொருளாதார நிலையினை உயர்த்துவதாக இருக்கலாம் 2) இருக்கின்ற சமூக அமைப்பு முறையைமாற்றுவதன் மூலம் அனைத்து மக்களுக்குமான விடுதலையோடு தனது மக்களுக்கு மான விடுதலையைஅடைவதற்கு முயற்சிக்கலாம்.

பெரும்பாலான சாதி இயக்கங்கள் நிலவுகிற சமூக அமைப்பில் தமது மக்களின் நிலையினைஉயர்த்துவதையே இலக்காகக் கொண்டு செயல் பட்டிருக்கின்றன. தலித் இயக்கங்களில் ஒருசில சாதியினர்சமூக அமைப்புமுறையினை தலைகீழாய் மாற்றுவதை, அதாவது சாதி ஒழிப்பு என்ற புரட்சிகர இலக்கினைக்கொண்டிருக்கின்றனர். தேவேந்திரர் அமைப்புகள் நிலவும் படிநிலை அமைப்புமுறையினை ஒழிப்பதைஇலக்காகக் கொண்டிருந்தனவா அல்லது நிலவுகிற சமூக அமைப்பின் படிநிலையில் தமது நிலையினைமேலே உயர்த்திக்கொள்வதற்கு முயற்சி செய்தனவா அல்லது தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து தம்மைமுன்னேற்றிக் கொள்வதற்காகப் போராடினவா? தேவேந்திரர் அமைப்பு களின் நோக்கம் மற்றும் அவர்கள்நடத்திய மாநாடுகளில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களிலிருந்து மேலேயுள்ள கேள்விகளுக்கானபதில்களைக் காண்போம்.

அனைத்து தேவேந்திரர் இயக்கங்களின் இலக்கும் ஒன்றுக்கொன்று குறிப்பிட்டுக்கூறும்படிவேறுபட்டிருக்கவில்லை மாறாகா அவைகளுக்கு ஒரு பொதுத்தன்மை இருக்கின்ற காரணத்தினால்ஒவ்வொரு தேவேந்திரர் இயக்கத்தின் நோக்கத்திலிருந்து ஒரு முடிவுக்கு வருவதனை விடவும் அனைத்துஅமைப்புகளின் நோக்கத்திலிருந்தும் ஒரு முடிவினை எட்டுவதற்கு முயற்சிக்கலாம்.

பொதுவெளிகளை அணுகுதல்

தலித்துகள் மற்றும் பெண்கள் உட்பட ஒன்றுக்கும் மேற்பட்ட பல்வேறு சாதியினைச் சேர்ந்தவர்கள் ஒருஇடத்தில் ஏதாவது ஒரு தேவைக்காக அல்லது காரணத்திற்காக சங்கமிக்கின்ற இடத்தினை பொதுவெளிஎன்று வரையறுக்கலாம். இத்தகைய பொதுவெளி பெரும்பாலும் அரசாங்கத் தின் நிதியுதவியால்உருவாக்கப்பட்டிருக்கலாம் அல்லது பராமரிக்கப்பட லாம். பொதுசாலை, கட்டிடம், பள்ளிக்கூடம், நீதிமன்றம்,அஞ்சலகம், பேருந்து போன்றவற்றினை பொதுவெளிக்கான உதாரணமாகக் கொள்வோம். இவற்றினைஅணுகுவதிலிருந்தும் அனுபவிப்பதிலிருந் தும் தலித்துகளும் பெண்களும் திட்டமிட்டே விலக்கபட்டிருந்தனர்.சமூக ஒடுக்குமுறையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றால் தலித்துகள் முதலில்பொதுவெளிகளை அணுகுவதற்கும் அனுபவிப்பதற்குமான உரிமையைப் பெற்றாகவேண்டும். தேவேந்தி ரர்இயக்கங்கள், பொதுவெளிகளை அணுவதற்கும் அனுபவிப்பதற்கும் தலித்துகள் பாகுபாடின்றி அனுமதிக்கப்படவேண்டும் என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும், பேருந்து மற்றும் படகில் பயணிப்பதற்குஅனுமதி மறுக்கிற ஊர்திகளின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும், மேலும் தண்டம் விதிக்கவேண்டும்என்றும் வலியுறுத்தி யிருக்கின்றன.

அரசியல் பிரதிநிதித்துவம்

அரசியல் தளத்தில் தேவேந்திரர் இயக்கங்கள் காலனியாட்சிக் காலத்தில் செயல்பட்டிருக்கவில்லை என்றஎண்ணம் நிலவுகிறது. ஆனால் உள் ளாட்சி அமைப்பு முதற்கொண்டு சென்னை மாகணப் பேரவை வரையிலும் தேவேந்திரர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. மட்டுமின்றிவட்டமேசை மாநாட்டிற்கு தேவேந்திரர் சாதியினைச் சேர்ந்த ஒருவரை அனுப்ப வேண்டும் என்றும்கோரப்பட்டிருக்கிறது. இத்தகைய கோரிக்கைகள் தேவேந்திரர்களிடத் தில் அரசியலில் பங்கேற்பது குறித்தவிழிப்புணர்வு இருந்திருப்பதனைக் காட்டுகின்றன.

மேலும் காலனியாட்சிக்கு ஆதரவான அரசியல் நிலைப்பாடும் சுதந்திர இயக்கத்திற்கு எதிரான நிலைப்பாடும்தேவேந்திரர் இயக்கங்களிடம் இருந்திருக்கிறது. ஆனால் அனைத்து தேவேந்திரர் இயக்கங்களும் காலனியஆதரவு மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு நிலைப்பாட்டினை கொண் டிருக்கவில்லை. காங்கிரஸ் இயக்கம் மற்றும்காந்தியை ஆதரித்தல் என்ற நிலைப்பாடும் அவர்களிடம் இருந்தது. ஆனால் இதர தலித் இயக்கங்கள்அரசியல் போராட்டத்தில் ஈடுபட்ட அளவிற்கு தேவேந்திரர் இயக்கம் செயல்பட்டிருக்கவில்லை என்பதைக்காணமுடிகிறது.

மதுவருந்தக் கண்டனம்

மதுவருந்துதல் உடலுக்குக்கேடு விளைவிக்கிறது என்ற நோக்கில் எதிர்ப்பதனைவிடவும் ஒழுக்கக்கேடு என்றநோக்கிலேயே அது எதிர்க்கப் படுகிறது. மதுவருந்துதல் தலித் பண்பாடு என்றும் அதனை விட்டொழிப் பதுசமஸ்கிருதமயமாக்கம் என்றும் வாதிடப்படுகிறது. ஆனால் தேவேந் திரர் இயக்கங்கள் மதுவருந்துதலைகண்டித்திருப்பதோடு அதனை விட்டொழிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கின்றன. இதனால் இதனைசமஸ்கிருதமயமாக்கம் என்று கூறிவிட முடியாது. காரணம் சமீப காலங்களிலும்கூட தேவேந்திரர்களிடத்தில்மதுப்பழக்கத்தினை ஒழிப்ப தற்கான இயக்கங்கள் செயல்பட்டிருக்கின்றன. இவற்றின் நோக்கம்,பொருளாதாரத்தில் சார்புத்தன்மை ஒழிக்கப்பட வேண்டுமென்றால் மது வருந்துவதற்கென பணம் விரயம்செய்யப்படுவது முதலில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே. எனவே காலனியாட்சிக் காலத்தில் தேவேந்திரர்இயக்கங்கள் மதுப்பழக்கத்தினை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தியது பொருளாதாரத்தில் சுயத்தன்மைக்கேஎன்றே புரிந்து கொள்வோம்.

கல்வி கற்றல்

சமூக ஒடுக்குமுறையிலிருந்து தங்களை விடுவித்திக் கொள்வதற்கு கல்வி கற்பது தவிர்க்கவியலாதத்தேவை என்பதை இதர சாதியினர் உணர்ந்திருந்தது போல் தேவேந்திரர்களும் உணர்ந்திருந்தனர். வாசிப்புப்பழக்கமும் ஒப்பமிடலும் அவசியம் என்பதனை தேவேந்திரர் இயக்கங்கள் உணர்ந்திருக்கின்றன.கல்லாமையால் தேவேந்திரர்கள் அவர்களையே ஏமாற்றுகின்ற ஆவணங்களில் கைரேகை இடுகின்ற னர்,இதனால் சம்பந்தபட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் என் பதை இயக்கங்கள் உணரத் தொடங்கின.எனவே, தேவேந்திரர் அமைப்புகளின் தலைவர்களது கூட்டு ஒப்பம் இல்லாத ஆவணங்களை அரசாங்கம்ஏற்றுக் கொள்ளக்கூடாதென வலியுறுத்தின. கல்லாமை யால் பாதிப்பும், ஒப்பமிடத் தெரியாததனைஅவமானமாகவும் உணர்ந்த இயக்கங்கள், தேவேந்திரர்கள் தமது பெயரினை ஒப்பமிட அறிந்தி ருக்கவேண்டும், தமது குழந்தைகளை கல்வி கற்பதற்கு அனுப்பவேண் டும் - இதற்காக அவர்களைநகர்ப்புறங்களுக்கு அனுப்பவேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கின்றன. திருச்சி ஜில்லா திராவிடர் உழவர்குலமாநாடு நிறைவேற்றிய ""சென்னை மாகாணத்திலுள்ள குழந்தைகளுக்கு கட்டாய இலவசக் கல்விவழங்கவேண்டும்'' என்ற தீர்மானம் அவர்கள் எந்தளவிற்கு கல்வியின் முக்கியத்துவத்தினைஉணர்ந்திருக்கின்றனர் என்பதை தெரிவிக்கிறது. பல்வேறு சாதியினைச் சேர்ந்த அமைப்புகள், தனிநபர்கள்இதழ் நடத்துதல் அதன் மூலம் தங்கள் சாதி மக்களை ஒருங்கிணைத்தல், சமூக ஒடுக்குமுறையைவெளிக்கொணருதல், சமூகச் சிக்கல் குறித்து விவாதித்தல் போன்ற செயல்பாட்டிற்காக தாம் கற்றகல்வியினைப் பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால் இந்த நோக் கங் களுக்காக தேவேந்திரர் இயக்கங்கள்கல்வியினைப் பயன்படுத்தி யிருக்காதது அந்த இயக்கத்தின் பலகீனத்திற்கு ஒரு காரணம் எனலாம்.

இதழற்ற இயக்கம்

இதழ் நடத்துதலை சாதி அமைப்புகள் பலவும் தங்களின் இயக்கச் செயல் பாட்டிற்கு அத்தியாவசியம் என்றுஉணர்ந்திருக்கின்றன, தலித் இயக்கங் களும் இதிலிருந்து விலகியிருக்கவில்லை. பறையர்களின் இயக்கச்செயல்பாட்டினை நோக்கும் பொழுது அவ்வியக்கம் மற்றும் அச்சாதி யினைச் சார்ந்தோர் பல இதழ்களைநடத்தியிருப்பதனைக் காணமுடிகி றது. ஆனால் தேவேந்திரர் இயக்கங்களை நோக்கும் பொழுது அவை இதழ்நடத்தியிருக்கவில்லை என்பது மட்டுமின்றி, இதழ் நடத்துவதற்கான எந்த முயற்சியினையும்எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. ஆவணக் காப்பகம் மற்றும் கள ஆய்வில் தேவேந்திரர் இயக்கம் ஏதாவதுஇதழ் நடத்தியிருந்ததா என்ற தேடலில் ஈடுபட்டு அது ஏமாற்றத்தில்தான் முடிந் தது. தேவேந்திரர்அமைப்புகளின் இதழற்ற இயக்கத்திற்கு இரண்டு அடிப்படைக் காரணங்களைக் கூறமுடியும். ஒன்று,காலனியாட்சிக் காலத்தில் தேவேந்திரர்களிடத்தில் மேற்கத்தியக் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை இதரதலித் சாதிகளோடு ஒப்பிட்டு நோக்கினால் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்திருப்பதனைக்காணமுடிகிறது. இரண்டா வது, அச்சு இயந்திரம் மற்றும் அச்சு ஊடகங்கள் புழக்கத்திலிருந்து நகரப்பகுதிகளுக்கு தேவேந்திரர்களின் இடப்பெயர்வு இல்லாதிருந்திருக்கிறது.

காலனிய விசுவாசமும் எதிர்ப்பும்

சாதிய இயக்கங்கள் காலனிய ஆட்சியை ஆதரித்தல் மற்றும் எதிர்த்தல் என்ற நிலைபாட்டுடன்இயங்கியிருப்பதனைக் காணலாம். காலனியாட்சி யினை எதிர்த்த இயக்கங்கள் காங்கிரஸ் நடத்திய பல்வேறுபோராட்டங் களில் பங்கேற்றிருப்பதனைக் காண முடிகிறது. காலனிய ஆட்சியினால் நேரடியாக பாதிக்கப்பட்டசாதியினர் காலனிய எதிர்ப்பு நிலைப்பாட் டினைக் கொண்டிருந்தனர். எல்லா சாதியினருக்கும் காலனிய ஆட்சிஏற்படுத்தியிருந்த நவீன நிறுவனங்களில் வாய்ப்பு வழங்கப்பட்டது போல் தலித்துகளுக்கும் வழங்கப்பட்டது.இதனால் தலித்துகள் காலனிய ஆட்சி யினை ஆதரிக்கும் போக்கினை கைக்கொண்டனர். மேலும், காந்திமற்றும் காங்கிரஸ் இயக்கத்துடன் கொண்டிருந்த முரண்பாட்டின் காரண மாக விடுதலை இயக்கத்தில்பங்கேற்காமலும் இருந்தனர். இந்த காரணங்களினால் தலித்துகளை காலனிய ஆட்சியின் கைக்கூலிகள் என்றுமுத்திரை குத்துவது அபத்தமான செயலாகும். தேவேந்திரர்களி டத்தில் காலனியாட்சிக்கு விசுவாசமாகஇருத்தல் அதனை எதிர்த்தல் என்ற இரண்டு நிலைப்பாடு இருந்திருக்கிறது. திருச்சிராப்பள்ளி திராவிடஉழவர்குல மாநாடு மற்றும் இராமநாதபுரம் பூவைசிய இந்திரகுல மாநாட்டுத் தீர்மானங்களிலிருந்து இந்தஇயக்கங்கள் காலனியாட்சிக்கு விசுவாசமாக இருந்திருப்பதைக் காணமுடிகிறது. எங்களுக்கு ஆதரவாகஇருக்கின்ற காலனியாட்சிக்கு விசுவாசமாக இருப்போம் என்பதே இவ் விரண்டு மாநாடுகளின் முதல்தீர்மானமாகும். காட்டுத்தீ போல் பரவும் ஒத்துழையாமை இயக்கத்தை வெறுக்கிறோம் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைகிற பொழுது அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்ப தற்கு திராவிட உழவர்குல மக்களுக்குபடைப் பயிற்சியளிக்க வேண்டும் என்ற திராவிட உழவர்குல மாநாட்டின் தீர்மானங்களிலிருந்து தேவேந்திரர்கள் காலனியாட்சிக்கு எதிராக இருப்பவர்களை எதிர்த்து களப்போர் புரியவும் தயாராக இருந்திருக்கின்றனர்என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் பாண்டியர் சங்கம் தேசப்பற்றுடன் இருக்க வேண்டும் என்றேவலியுறுத்தியிருக்கிறது. இதிலிருந்து அவர்கள் காலனிய எதிர்ப்பு நிலைப் பாட்டினைக்கொண்டிருந்திருக்கின்றனர் என்று முடிவு செய்யலாம்.

ஹரிஜன் சேவா சங்கம் செய்த சேவையினால் காங்கிரஸ் இயக்கத்தோடு இணைந்து இந்திய விடுதலைஇயக்கத்தில் தேவேந்திரர்கள் பங்கேற்றி ருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர்பொறுப் பினை வகித்த அய்யனார் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றிருக்கிறார். காங்கிரஸ்இயக்கத்தினைச் சேர்ந்த பழனியப்பன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதோடு தனதுபெயரை இந்தியன் மகன் என்று மாற்றிக் கொண்டதன் மூலமும் தேசப் பற்றினை வெளிப்படுத்தியிருக்கிறார்.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறைவாசம் அனுபவித்த தாசப்பண்ணாடி என்றதேவேந்திரர் காந்தியின் கருத்தியல் குறித்தும் சுதந்திரத்தின் முக்கியத்து வம் குறித்தும் கிராமங்களில்நாடகம் நடத்தியுள்ளார். கோயம்புத்தூர் பகுதியில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுமார்16 தேவேந்திரர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு வருடம் சிறைத்தண்டனை அனுபவித்திருக்கின்றனர்.12எனவே, தேவேந்திரர் இயக்கம் காலனிய

ஆட்சியின் மூலம் சில பலன்கள் தங்களுக்கு கிடைக்கும் என்ற அடிப் படையில் காலனியாட்சிக்கானஆதரவான நிலைப்பாட்டினை எடுத்திருக் கின்றன. அதேசமயம் காங்கிரஸ் மற்றும் காந்தியின்செயல்பாட்டினால் ஈர்க்கப்பட்ட பள்ளர்கள் சுதந்திர இயக்கத்தில் பங்கேற்றிருக்கின்றனர். இதிலிருந்து காலனியஆட்சிக்கு ஆதரவு எதிர்ப்பு என்ற இரண்டுவகை நிலைப்பாடு பள்ளர்களிடத்தில் இருந்திருப்பது தெளிவாகிறது.


சமூக சீர்திருத்த இயக்கங்களுடனான உறவு

காலனியாட்சிக் காலத்தில் ஆரியர் திராவிடர் என்ற எதிரெதிர் கருத்து நிலையில் பிராமணர்கள் ஆரியரென்றும்பிராமணரல்லாதோர் திராவிடர் என்ற கருத்தாக்கம் கட்டமைக்கப்பட்டது. சமூக விடுதலைக்கான வேட்கையின்பின்புலத்திலிருந்து உருவான திராவிடம் என்ற கருத்து நிலையாக்கத்துடனும் அதனை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்களுடனும் பிராமணரல்லாத சாதி இந்துக்கள் முதற்கொண்டு சமூகத்தின் அடிமட்டத்திலிருத்தி வைக்கப்பட்டிருந்த சாதிகள்வரைஇணைந்திருந்த னர். சமூக சீர்திருத்தம் என்றளவில் மட்டுமல்லாது சாதி ஒழிப்பு, இந்துமத ஒழிப்பு என்ற புரட்சிகரஇலக்கினைக் கொண்டு செயல்பட்ட இயக்கங் களோடும் அதன் தலைவர்களோடும் ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்கள்நட்புறவு கொண்டிருந்தன, இந்த நட்புறவு மாநில அளவில் மட்டுமின்றி அதனைக் கடந்தும் இருந்தது. குறிப்பாக, சமூகஉரிமைகளுக்காக மட்டுமின்றி சாதி ஒழிப்பு என்ற இலக்கினைக் கொண்டு தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த அம்பேத்கர்மற்றும் பெரியார் ஆகியோரோடு தமிழக தலித்துகள் நெருக்கமான நட்புறவினைக் கொண்டிருந்தனர். ஆனால், அம்பேத்கர்மற்றும் பெரியார் இவர்களோடு தேவேந்திரர் இயக்கங்கள் மேம்போக்கான நட்புறவினையே கொண்டிருந்தன. முதலில்தேவேந்திரர் இயக்கம் அம்பேத்கரோடு கொண்டிருந்த நட்புறவு குறித்து காண்போம்.

தேவேந்திரகுல மகாஜன சங்கத்தைச் சேர்ந்த தேக்கம்பட்டி பாலசுந்தரராசு 1920களின் நடுப்பகுதியிலிருந்தே அம்பேத்கருடன்உறவினை ஏற் படுத்திக்கொண்டார். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த பள்ளர்கள் அம்பேத்கரின் கோரிக்கை வெற்றிபெறவேண்டும் என்று தந்தி அடித்த தாக வாய்மொழித் தரவு உள்ளது. 1936ம் ஆண்டு பூவைசிய இந்திர குல வேளாளர்சங்கம் அம்பேத்கரை தென்தமிழகத்திற்கு அழைத்தது ஆனால் அவரால் வர இயலாமற் போனது. இருப்பினும் பாலசுந்தரராசுவின் தொடர் முயற்சியின் விளைவாக அம்பேத்கர் 29 டிசம்பர் 1946 அன்று மதுரை விக்டோரியா ஹாலில் பள்ளர்கள்ஒருங்கிணைத்திருந்த மாநாட்டில் அம்பேத்கர் உரையாற்றினர். அவரது ஆங்கில உரையை மேலக்கால் வீரபத்திரன் என்றதேவேந்திரர் மொழிபெயர்ப்பு செய்தார். இந்தக்கூட்டத்தில் தேவேந்திரர் சாதியைச் சேர்ந்த இம்மானுவேல் சேகரன் உட்படசிலர் பங்கேற்றனர். இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய நிகழ்வும் நடைபெற்றிருக்கிறது. அதாவது, இந்த மாநாட்டில்தான் முதன்முறையாக பல பகுதிகளைச் சேர்ந்த தேவேந்திரர்கள் பங்கேற்றனர். இருப்பினும், கோயம்புத்துர் மற்றும்திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த தேவேந்திரர்கள் பங்கேற்றிருக்கவில்லை.

இனி, தேவேந்திரர் இயக்கம் பெரியாரோடு கொண்டிருந்து உறவு குறித்து விவரிக்கலாம். 31 ஆகஸ்ட் 1936 அன்றுதேவேந்திரர்கள் தேனி அருகே பெரியகுளத்தில் நடத்திய மாநாட்டில் தேவேந்திரர்களின் அழைப்பிற் கேற்ப பங்கேற்றபெரியார்14, சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பெயரான தேவேந்திரர் என்பதை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.15 காலனி ஆட்சிக்காலத்தின் போது பெரியார் தேவேந்திரர்கள் நடத்திய மாநாட்டில் ஒரேஒரு மாநாடு இதுதான். எனவே, ஏன்அம்பேத்கரோடும் பெரியாரோடும் தேவேந்திரர் இயக்கங்கள் மேம்போக்கான நட்புறவினைக் கொண்டிருந்தன என்பது குறித்துவிவாதிப்பது அவசியம். இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றால் முதலில் திராவிடம் என்ற கருத்துநிலையாக்கத்தோடு தேவேந்திரர்களுக்கு இருந்த பற்றுதல் குறித்து காண்பது அவசியம்.

கருவிலேயே கலைந்த திராவிடம்

திராவிடர் ஆரியர் என்ற இரண்டு முரண்பட்ட கருத்துநிலையாக்கத்தில் தலித்துகள் தங்களை திராவிடத்தோடு இணைத்துக்கொண்டனர். அது மட்டுமல்லாது தாங்கள்தான் திராவிடர்களிலும் தொல்குடிகள், மூத்தவர் கள் என்ற உரிமையையும்கோரினர். தொன்மையானவர் என்ற அடையாளத்திற்காக ஆதி-திராவிடர் என்ற பெயரினையும் தங்களுக்குச் சூட்டிக்கொண்டனர். எனவே, ஆதி-திராவிடர் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரல்ல அது உச்சபட்சத் தீண்டாமைக்கொடுமைக்குட்பட்டி ருந்த தொல்குடிகளின் அரசியல் அடையாளம். இந்த அரசியல் அடை யாளம் தங்களை சாதியற்றோர்என்று அறிவிக்கிறது, இது சாதியக் கட்டமைப்பினை வலியுறுத்தும் கோட்பாட்டிற்கும் அதன் ஏற்றத்தாழ் வான படிநிலைசமூக அமைப்பிற்கும் நேரெதிரானது. ஆதி-திராவிடர் என்ற பெயராலாயே உச்சபட்சத் தீண்டாமைக் கொடுமைக்குட்பட்டிருந்ததொல்குடிகள் அழைக்கப்பட வேண்டும் என்பதற்காக அந்த அரசியல் அடையாளப் பெயரினை அறிமுகம் செய்ததிலும்,அதற்கு ஆளும் வர்க் கத்தின் அங்கீகாரத்தினைப் பெற்றதிலும் பறையர் இயக்கங்கள் முக்கியப் பங்களிப்பினைச் செய்திருந்தபோதிலும் அது பறையர்களுக்கான பெயரல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இனி, நாம் தேவேந்திரர்இயக்கம் ஆதி-திராவிடர் என்ற அரசியல் அடையாளத்தோடு எந்தளவிற்கு பற்றுதல் கொண்டிருந்தது என்பது குறித்துக்காண்போம்.

திருச்சிராப்பள்ளியில் 21 & 22 மே 1922 அன்று நடைபெற்ற தேவேந் திரர்களின் மாநாடு திராவிடர் என்ற பெயரினையேபயன்படுத்தியிருக்கி றது. ஆதி-திராவிடர் என்ற பெயரினைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற அரசாணை வெளியானபின்னரே இம்மாநாடு நடைபெற்றிருப்பி னும் அப்பெயரினை பயன்படுத்தியிருக்கவில்லை. ஆனால் அவர்கள் திராவிடர்உழவர்குலம் என்று தங்களை அடையாளப்படுத்தியிருப்ப திலிருந்து அவர்கள் பிராமணீயத்திற்கு எதிரான நிலைப்பாட்டினைஎடுத் திருக்கின்றனர் என்று கூற இயலும். 1931ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி யில் நடைபெற்ற தேவேந்திரர்களின் மாநாடுஆதி-திராவிடர்கள் ஒன்றி ணைய வேண்டும் என்றும், இந்து மத எதிர்ப்பு நிலைப்பாட்டினையும் எடுத்திருக்கின்றனர். இராமநாதபுரத்தில் 20 & 21 ஜூன் 1925 அன்று நடைபெற்ற தேவேந்திரகுல மகாஜன சபா ஆதி-திராவிடர்களின் ஒரு பிரிவாக தங்களை இனம் கண்டிருக்கிறது. இந்த மூன்று நிகழ்வுகளில் மட்டும்தான் தேவேந்திரர்கள் தங்களை ஆதி-திராவிடர்என்ற பெயரோடு அடையாளப்படுத்தியிருக்கின்றனர். இதிலும்கூட அவர்களுக்குள் சுய சாதி அடையாளம்மேலோங்கியிருந்திருப்பதனைக் காணமுடிகிறது. இந்த மூன்று நிகழ்வினைத் தவிர வேறு எந்த மாநாட்டிலும் அல்லதுஅமைப்புகளிலும் தேவேந்திரர்கள்

ஆதி-திராவிடர் மற்றும் திராவிடர் என்ற பெயரினை பயன்படுத்தியிருக்கவில்லை. ஆதி-திராவிடர் மற்றும் திராவிடர் என்றகருத்தாக்கங்கள் ஒருசில தேவேந்திரர் அமைப்புகளிடம் மட்டுமே கரு நிலையில் இருந்திருக்கிறது மற்ற இயக்கங்களிடம்அக்கருநிலை கூட உருவாகியிருக்கவில்லை. திரா விடர் மற்றும் ஆதி-திராவிடர் என்ற அடையாளத்தைப்பயன்படுத்தியிருக் கிற அமைப்புகள்கூட மாநாடு முடிவுற்ற பின்னர் எந்த செயல்பாடும் இல் லாத காரணத்தினால்கருநிலையிலிருந்து அக்கருத்தாக்கம் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை, அது கருவிலேயே கலைந்துவிட்டது. நிலத்தோடும்நிலவுடைமை சார்ந்த கருத்தாக்கங்களோடும் பற்று கொண்டிருத்தல், நகரங்களுக்கு இடப்பெயர்வின்மை, உட்சாதி மற்றும்வட்டார உணர்வு, அற்பாயுசுத்தன்மை போன்றவை தேவேந்திரர்களிடம் திராவிடர் மற்றும் ஆதி-திராவிடர் கருத்தாக்கம்கருவில் கலைந்ததற்கும், அக்கரு பல தேவேந்திரர் இயக்கங்களிடம் உருப்பெறாமல் இருந்ததற்குமான காரணிகள்எனலாம்.

நிலவுடைமையோடு பிணைப்பு

தேவேந்திரர்களிடத்தில் எண்ணற்ற உட்பிரிவுகள் இருந்தன, இருந்து வரு கின்றன, ஆனால் அனைத்து உட்பிரிவுகளின்பாரம்பரியத் தொழில் விவ சாயம் மட்டுமே. பொதுவாக உச்சபட்ச தீண்டாமைக் கொடுமைக்கு உட் பட்டிருந்த சாதிகள் தாங்கள் பாரம்பரியமாக செய்து வந்த தொழிலினை விட்டொழித்துவிட்டு காலனியாட்சிக்காலத்தில் நவீனத்தும் வழங்கியதொழில்களில் ஈடுபடலாயினர். ஆனால் தேவேந்திரர்கள் அவ்வாறின்றி தங்களின் பாரம்பரியத் தொழிலாளனவிவாசாயத்தோடே பிணைத்துக் கொண்டிருந்தனர்.

நிலவுடைமைச் சமூகத்திற்கு எதிராக பொதுவுடைமை இயக்கம் பண்ணை யடிமைகளை ஒருங்கிணத்த பொழுதுதேவேந்திரர்களையும் அவ் வியக்கம் ஒருங்கிணைக்கின்ற முயற்சியில் இறங்கியது. தேவேந்திரர் மற்றும் பறையர்சாதிகளைச் சேர்ந்தோரே பெரும்பாலும் பண்ணையடி மைகளாக இருந்த காரணத்தினால் அவர்களே பொதுவுடைமை இயக்கத்தில் அதிகம் இணைந்தனர். இதனால் பொதுவுடைமைக் கட்சி பள்ளர் கட்சி, பறையர் கட்சி என்று அழைக்கப்பட்டது.16 தேவேந்திரர்கள் பல பகுதிகளில் தங்களை பொதுவுடைமை இயக்கத்தோடு இணைத்துக் கொண்டிருக்கின்றனர். அதேசமயம்,நிலைவுடைமைச் சமூக அமைப் பிற்கும் அதன் ஒழுங்குமுறைக்கும் ஆதரவாக பகிரங்கமான நிலைப் பாட்டினையும்எடுத்திருக்கின்றனர். இறுக்கமான நிலவுடைமையைக் கொண்டிருந்த தஞ்சாவூர் பகுதியில் பொதுவுடைமை இயக்கம் நிலவுடைமைக்கு எதிரான கட்சி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது நிலவுடைமைக்கு ஆதரவான நிலைபாட்டினையும்தேவேந்திரர்கள் எடுத்திருக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பருத்திக்கோட்டை மற்றும் ராசவேலுக்குடி கிராமங்களைச் சேர்ந்த தேவேந்திரர்கள் 23 மார்ச் 1936அன்று தேளு ரில் மாநாடு நடத்தினர். இதில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங் களில் நிலவுடைமைஅமைப்பினையும் அதன் மதிப்பீடுகளையும் பாதுகாக்க வேண்டும், நிலவுடைமையாளர்களை எதிர்க்கக்கூடாது மற்றும்நிலவுடைமையாளர்களின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும், பண்டைய மதிப்பீடுகளை பின்பற்ற வேண்டும் போன்றதீர்மானங்களும் அடங்கும்.17

தேவேந்திரர்களின் நிலவுடமையுடனான பிணைப்பு என்பது அந்த அமைப்பினை பாதுகாத்தால் என்ற நிலைப்பாடு வரைநீண்டிருக்கிறது என்பதை தேளூர் மாநாடு வெளிப்படுத்துகிறது. தேளூர் மாநாட்டு தீர்மானத்தினை அடிப்படையாகக் கொண்டுஅனைத்து தேவேந்திரர் களும் நிலைவுடைமக்கு பாதுகாப்பு அரணாக இருந்தனர் என்று கூறி விடமுடியாது. ஆனால்பெரும்பாலான தேவேந்திரர்கள் நிலைவுடைமை யின் பிணைப்பிலிருந்து வெளியேறியிருக்காததால் அவர்களிடத்தில்நிலவுடைமைக்கு எதிரான கருத்துக்கள் உருவாகியிருக்கவில்லை.

நகரங்களுக்கு இடப்பெயர்வின்மை

உச்சபட்சத் தீண்டாமைக்குட்பட்ட சாதியினர் ஒடுக்குமுறையிலிருந்து வெளியேறுவதற்காக தம்முடைய வாழ்விடத்திலிருந்தேவெளியேறியி ருக்கின்றனர், இச்செயல்பாடு காலனியாட்சிக் காலத்தில் அதிகரித்திருக் கிறது.18 இடம்பெயருதல் பலசாதகமான விளைவுகளையே ஏற்படுத்தி யிருக்கிறது. இடம்பெயர்கின்றவர்கள் வேறிடம், குறிப்பாக நகரங் களுக்குச்செல்வதன் மூலம் சமூகப் பொருளாதார அளவில் ஒரு முன் னேறிய வாழ்வினையே வாழ்ந்திருக்கின்றனர். மேலும்,சமத்துவம் தொடர்பான கருத்துக்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றினை உள் வாங்குவதற்கும் அவற்றில் பங்கெடுத்துஅதனை அனுபவிப்பதற்கு மான வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. சமூக விடுதலைக்கான அமைப்புகளைஉருவாக்குதல், இயக்கச் செயல்பாடுகளில் பங்கெடுத் தல், அவைகளில் முன்னணிப் பாத்திரம் வகித்தல் போன்றவைகள்இடம் பெயர்ந்தவர்கள் மூலமே சாத்தியப்பட்டிருக்கிறது.

தேவேந்திரர்களின் இடப்பெயர்வு சமூக ஒடுக்குமுறையினால்தான் ஏற்பட்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால்அவர்கள் பெரும்பாலும் காலனியாட்சிக்காலங்களில் உருவாக்கப்பட்டத் தேயிலைத் தோட்டங்களுக்கேஇடம்பெயர்ந்திருக்கின்றனர். எந்த அளவிற்கு நகரங்களுக்கும் தேயிலைத் தோட்டங்களுக்கும் வேறுபாடு இருக்கிறதோ அதேஅளவிற்கு தேயிலைத் தோட்டத்திற்கும் விவாசாயப் பண்ணைகளுக்கும் ஒப்புமை இருக்கிறது. ஒடுக்குமுறையற்ற சுதந்திரமான வாழ்வு, சமத்துவத்திற்கான கருத்தியல், அது குறித்த விவாதங்கள், அச்சு ஊடகங்கள், ஆளும் வர்க்கத்தினைகாண்பதற்கான வாய்ப்பு, கல்வி கற்றலுக்கான வாய்ப்பு போன்றவை நகரங்களில் கிடைத்தன. ஆனால் இவை எவையுமேமலைப்பிரதேசங்களில் அமைந்திருந்த தோட்டங்களில் இல்லை. இந்த நிலை விவாசயப் பண்ணைகளிலும் ஏற்கனவேஇருந்து வந்த ஒன்றுதான். எனவே, எவ்விதமான முற்போக்குக் கருத்தியல்களையோ, மேம்பட்ட வாழ்வினையோதேயிலைத் தோட்டங்களுக்கே இடம்பெயர்ந்த தேவேந்திரர்கள் அனுபவித்திருக்கவில்லை என்பதே திண்ணம். விவாசயப்பண்ணை யடிமை வாழ்க்கையிலிருந்து தேயிலைத் தோட்டத்தொழிலாளர் வாழ்க்கை குறிப்பிட்டுக் கூறுமளவிற்குமாறுபட்டிருக்கவில்லை. தேயிலைத் தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை ஒருவிதத்தில் பின்னோக் கியப் பயணமே!. காரணம்,எவையெல்லாம் கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் இருக்கின்றதோ அவற்றிலிருந்தெல்லாம் - உதார ணமாக, சமூகஅமைப்பில் பங்கெடுத்தல், அரசியல் விவாதத்தினைக் கவனித்தல், கல்வி கற்றல் போன்றவை- தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் பிரிந்துவிட்டனர்.

உட்சாதி & வட்டார உணர்வு

பொதுவாக தங்களுக்குள் இருக்கின்ற உட்சாதியினை ஒழித்தல் என்பது ஒடுக்கப்பட்ட சாதிகளிடத்தில் காலனியாட்சிக்காலத்தில் உருவானது. ஆனால் ஒரே தொழிலினைச் செய்தபோதிலும் -உயர்வு, தாழ்வு- என்ற எண்ணங்களுடன் பலபிரிவுகளாகப் பிரிந்திருந்த தேவேந்திரர்களின் உட்சாதியினை ஒழிப்பதற்கு அவ்வியக்கங்கள் முனைந்திருக்கவில்லை. மாறாக, தேவேந்திரர் இயக்கங்கள் உட்சாதி உணர்வோடே இயங்கியிருக் கின்றன. இந்த விவாதித்தினை வலுப்படுத்துவதற்குசில முக்கிய ஆதாரங்கள் உள்ளன:

1) தேவேந்திரர் அமைப்புகளின் பெயர்களும் -தேவேந்திரகுலம், பூவைசிய இந்திரகுலம், இந்திரகுலாதிப வெள்ளாளர்,பாண்டியர்- தனிநபர்களின் பெயர் பின்னொட்டுகளும் -தேவேந்திரர், மூப்பனார், பாண்டியர்- அவர்கள் உட்சாதி உணர்வோடேஇயங்கியிருக் கின்றனர் என்பதை எடுத்துரைக்கிறது.

2) தேவேந்திரர் மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அமைப்புகளின் நோக்கங்கள் - உ.தா. தேவேந்திரகுலவெள்ளாளர் வட்ட மேசை மாநாட்டிற்கு அனுப்பப்பட வேண்டும், சென்னை மாகாண அவைக்கு சுப்பிரமணிய மூப்பனார்நியமிக்கப்படவேண்டும், இந்திரகுலாதிப வெள்ளாளர்களை முன்னேற்ற வேண்டும்- தேவேந்திரர்களின் உட்சாதிஉணர்வினையே வெளிப்படுத்துகிறது.

3) அவர்கள் ஒருபோதும் தங்களின் உட்சாதியினை உணர்வினை ஒழிக்கவேண்டும்என்றோ உட்சாதி உணர்வினைக் கடந்து ஒன்றிணைய வேண்டும் என்றோ வலியுறுத்தியிருக்கவில்லை. ஒவ்வொருஉட்சாதியும் தனித்தனி சாதியாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டு சாதிகளுக் கிடையே இருக்கின்றஏற்றத்தாழ்வான கருத்தியல், முரண்பாடு, மோதல் இவைகள் தேவேந்திரர் உட்சாதிக்குள் இன்றும் தொடர்ந்து இருந்து வருகின்ற பொழுது இது காலனியாட்சிக் காலத்தின் பொழுது எந்தளவிற்கு இறுக்கமாக இருந்திருக்கும் என்பதனை மிக எளிதாகஊகித்துக் கொள்ளமுடியும். ஒடுக்கப்பட்ட சாதிகள் தங்களுக்கிடையேயான உட்சாதி வேற்றுமைகளை ஒழிப்பதற்கானமுயற்சியில் இருந்த பொழுது தேவேந்திரர்கள் அதனை ஒழிப்பதற்குப் பதிலாக அதனைப் பேணிப் பாதுகாத்துள்ளனர். உட்சாதியினை ஒழிப்பதற்கு முன்வந்திருக்காத தேவேந்திரர் அமைப்புகள் சாதி ஒழிப்பு என்று கோரிக்கையோடு அதுஇணைந்திருக்காதது வியப்புக்குரியதல்ல.

4) காலனியாட்சிக் காலத்தில் தாலுக்கா, மாவட்டம் போன்ற நிர்வாக முறைகள் உருவாக்கம், சாலை அமைத்தல், பேருந்துஅறிமுகம் போன்றவை சாதிகளுக்கு இடையே இருந்துவந்த வட்டார உறவினை விரிவடையச் செய்தது. ஆனால்,தேவேந்திரர் இயக்கம் பரந்து விரியாமல் வட்டாரங்களுக்குள்ளேயே இயங்கியது, அக்குறிப்பிட்ட வட்டாரத்தினைக் கடந்துஅமைப்புகள் கட்டப்பட்டிருக்கவில்லை. மேலும், ஒரே வட்டாரத்திற்குள் ஒன்றிற்கு மேற்பட்ட அமைப்புகள் செயல்பட்டிருக்கிறன.

மாற்று மதமும் மதமாற்றமும்

இந்துமத சாதிக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு இந்து மதத்திலிருந்து வெளியேறி மதம் மாறுதல் அல்லதுஅதற்கு எதிரான மாற்று மதத்தினை உருவாக்குவது என்பது உச்சபட்ச தீண்டாமைக்காட் பட்ட சாதி இயக்கங்களின்நிலைப்பாடாக இருந்திருப்பதனைக் காண லாம். மதம் மாறுதல் அல்லது மாற்று மதத்தினை உருவாக்குதல் இவற்றில்பிராமணீயக் கருத்தியலைப் புறக்கணித்தல் அதன் உள்ளீடு. மாற்றுமதத்தினை உருவாக்குவதில் இந்துமதஒடுக்குமுறையிலிருந்து விடுபடுதல் என்ற வேட்கை மட்டுமின்றி அதற்கு எதிராக சமத்துவத்திற் கான மாற்றுச்சமூகத்தினை, வாழ்க்கை முறையினை கட்டமைத்தல் என்ற போக்கும் உள்ளடங்கியுள்ளது. மாற்றுமதத்தினைகட்டமைத்தல் என்ற செயல்பாடு சம்பந்தப்பட்ட சாதிகள் அமைப்புரீதியாக அம்முயற்சி யினை எடுத்திருக்கின்றனர், அதுவும்ஒரு இயக்கமாகவே நடைபெற் றிருப்பதனைக் காணமுடிகிறது. மாற்றுமதத்திற்கான உதாரணமாக, சமார்களின் சத்னாமிஇயக்கம்19, பறையர்களின் பவுத்த இயக்கம்20 போன்றவற்றினைக் கூறலாம்.

தேவேந்திரர் இயக்கங்களின் செயல்பாடுகளை நோக்கும் பொழுது அவைகள் இந்து மதத்திற்கு மாற்றான மதத்தினைகட்டமைப்பதற்கு முயற்சித்திருக்கவில்லை. மாறாக, சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடு பட வேண்டும் என்ற நோக்கில்மதம் மாறியிருக்கின்றனர், இதுவும்கூட தேவேந்திரர் இயக்கங்களினால் வலியுறுத்தப்பட்டிருக்கவில்லை.சமூகஒடுக்குமுறையை அனுபவித்து உணர்ந்த தேவேந்திரர்கள் அவர்களின் சாதி இயக்கங்களின் துணையின்றி தன்னிச்சையாய்சில கிராமங்களில் மதம் மாறியிருக்கின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் ஆலபுரம் பகுதியில் பெரும்பாலான தேவேந்திரர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளதாகடேவிட் மோஸ் குறிப்பிட்டுள்ளார்21. திருநெல்வேலி மாவட்டம் சீதைக்குறிச்சியில் 1900ல் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதேவேந்திரர்களிடத்தில் 1940களில் மத மாற்றத்தில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. 1944ல் அந்த சீதைக்குறிச்சி தேவேந்திரர்கள்கிறிஸ்துவத்திலிருந்து இசுலாம் மதத்திற்கு மாறியதிலி ருந்து இதனை அறிந்துகொள்ள முடிகிறது.22 இதற்குப் பின்னர்1945ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 2000 பள்ளர்கள் இசுலாம் மதத்திற்கு மாறியுள்ளனர்23. கிறிஸ்துவத்திலும் சாதியம் தொடர்கிறது என்ற அவநம்பிக்கை தேவேந்திரர்களிடத்தில் உருவாகியிருக்கிறது என்றேஇதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. தலித்துகளின் மதமாற்றம் உள்ளூரளவிலேயே நிகழ்ந்திருக்கிறது அது ஒருஇயக்கமாக உருவாகியிருக்கவில்லை என்ற ஆய்வாளர் ஒருவரின் கூற்று தேவேந்திரர்களைப் பொறுத்த மட்டிலும்சரியானதே24. தேவேந் திரர்களின் மதமாற்றம் இந்துமதத்தின் மீது வெறுப்பு, அதன் ஒடுக்கு முறையிலிருந்து விடுபடுதல்என்ற நோக்கம் இருந்தபோதிலும் மாற்று மதத்தினை உருவாக்குதல் என்பது இல்லை. இதனால் சமத்துவத்திற் கானமாற்று மதத்தினை உருவாக்குதல் என்பது தேவேந்திரர்களிடத்தில் இல்லாதிருக்கிறது என்று கூற இயலும்.

அற்பாயுசுத்தன்மை

ஒருசிலவற்றினைத் தவிர மற்ற தேவேந்திரர் இயக்கங்கள் அற்பாயுசுத் தன்மை கொண்டவை. அதாவது அமைப்புகள்உருவாக்கப்பட்டு, அதற் கென்று சட்டத்திட்டங்கள், நோக்கம் போன்றவை வகுக்கக்கப்பட்டிருக்கும் ஆனால் அதற்குப் பின்னர்செயல்பாடு இருந்திருக்கவில்லை. சில வற்றில் மாநாடு நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும் ஆனால்அமைப்பு உருவாக்கப்படாததால் செயல்பாடு இருந்திருக்க வில்லை. எனவே தோன்றியதும் மறைதல், குறுகிய காலச்செயல்பாட் டிற்குப் பின்னர் உதிர்ந்துவிடுதல் என தேவேந்திரர் இயக்கங்களில் அற்பாயுத்தன்மையினைக் காணமுடிகிறது. மேலே விவாதிக்கப்பட்டிருக் கும் காரணிகளான -ஏற்றத்தாழ்வான உட்சாதி உணர்வு, வட்டார உணர்வு, நகர இடப்பெயர்வில்மந்தம், குறைவான கல்வி கற்றோர் மற்றும் வலுவான தலைமையின்மை- ஆகியன அற்பாயுசுத் தன்மைக்கு அடிப்படைக்காரணங்கள்.

குழந்தைப்பருவம்

சமூகச் சீர்திருத்த மற்றும் புரட்சிகர கருத்துக்களை முன்வைத்த தலைவர் களான அம்பேத்கர், பெரியார் போன்றோருக்கும்தேவேந்திரர்களுக்கும் இடையே பெருத்த இடைவெளியினை ஏற்படுத்தியதில், நிலவுடைமை யோடும் அதன்கருத்தியல்களோடும் பற்றுதல், உட்சாதி மற்றும் வட்டார உணர்வு, நகரங்களுக்கு இடப்பெயர்வின்மை, மாற்றுமதத்தினைஉரு வாக்காமை மற்றும் அற்பாயுசு போன்ற காரணிகள் முக்கியப் பங்காற் றின. அம்பேத்கர், பெரியார் போன்றோரிடமும்அவர்களின் கருத்துக் களிடமும் பற்றற்றத் தன்மையினால் தேவேந்திரர் இயக்கத்தை சமஸ் கிருதமயமாக்க இயக்கம்அல்லது இந்துத்துவ இயக்கம் என்று கூறிவிட முடியாது. எவையெல்லாம் சமஸ்கிருதமயமாக்கச் செயல்பாடுகள் என்றுஎம்.என்.ஸ்ரீநிவாஸ் கூறுகிறாறோ அவற்றினை தேவேந்திரர் அமைப்பு கள் தங்கள் சாதியினருக்குப்பரிந்துரைத்திருக்கவில்லை. அத்தகையச் செயல்பாடுகள் அம்மக்களிடத்தில் இடம் பெற்றிருக்கவில்லை. இதிலிருந்துதேவேந்திரர்களிடத்தில் சமஸ்கிருதமயமாக்கல் செயல்பாடு நடைபெற்றிருக்கவில்லை என்பது தெளிவு.

அமைப்புரீதியாய் ஒருங்கிணைதல் என்பது 1920களில்தான் தேவேந் திரர்களிடத்தில் தொடங்கியதால் அது வளரும்குழந்தைப்பருவ நிலை யிலேயே இருந்தது. காலனியாட்சிக் காலத்தில் பிறந்து நீண்டநாட்கள் உயிர்ப்புடன் செயல்பட்டபெருமாள் பீற்றரின் தலைமையிலான இயக்கம் தனது மக்களை முன்னேற்றும் பணியிலேயே ஈடுபட்டது. இதுகாலனியாட்சிக்குப் பின்னர் தேவேந்திரர்களின் உக்கிரமான போராளி யான இம்மானுவேல் சேகரனை உருவாக்கியது. இந்தஅமைப்பிற்கு மட்டுமே நிலைவுடைமையிலிருந்து வெளியேறுதல், நகர இடப்பெயர்வு, சாதி மறுப்புத் திருமணம் போன்றதன்மைகள் உண்டு. ஆனாலும்கூட தேவேந்திரர் உட்சாதியினை ஒழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதாகத்தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக தேவேந்திரர் அமைப்புகளை நோக் கும் பொழுது அது காலனியாட்சிக் காலத்தில்குழந்தைப்பருவத்திலேயே இருந்தது என்று கூற முடியும்.

முடிவுரை

காலனியாட்சிக் காலத்தில் தேவேந்திரர் இயக்கங்கள் பல இருந்தபொழு திலும் அவையனைத்தும் ஒரேவிதமானநிலைப்பாட்டினை எடுத்திருக்க வில்லை.ஒவ்வொரு இயக்கமும் வெவ்வேறுவிதமான நிலைபாட்டினைக் கொண்டிருந்தன. இதனால் அந்தந்த இயக்கங்களின் வரலாற்றினை எழுதுவது என்பதும் கடினமான செயல்தான், காரணம் அவைகள்அற்பாயுசுத் தன்மை கொண்டவை. எனவேதான் தேவேந்திரர்களிடம் செயல்பட்ட தேவேந்திரர்களின் அனைத்துஇயக்கங்களின் இலக்கு, கருத்தியல், அரசியல் நிலைப்பாடு போன்றவை குறித்து பொதுமைப் படுத்தி எழுதுவதற்குஇக்கட்டுரையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக் கிறது. இவ்வாறு பொதுமைப்படுத்தி எழுதியிருக்கின்ற காரணத்தினால்இதனை தேவேந்திரர் இயக்கம் மற்றும் தேவேந்திரர் சமூகம் இரண்டிற்கு மான வரலாறு என்றே கூறலாம். மேலேவிவரிக்கப்பட்டிருக்கின்ற வரலாற்றிலிருந்து தேவேந்திரர் இயக்கம் இரட்டை நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தது என்றுஒருவர் கூற முற்படலாம். ஆனால் அவ்வாறு கூறுவது தவறெனப்படுகிறது. பல தேவேந்திரர் இயக்கங்கள் செயல்பட்டகாரணத்தினால் அவை பல நிலைப்பாடுகளை கொண்டிருக்கின்றன. மேலும் அவ்வியக்கங்கள் அதன் குழந்தைப்பருவத்திலிருந்த காரணத்தி னால் எவ்விதமான கருத்தியல்களும் வலுப்பெற்றிருக்கவில்லை. இதனாலேயே அவை இதரசமூகச் சீர்திருத்த மற்றும் புரட்சிகர இயக்கங் களிடமிருந்து வேறுபட்டதாகத் தெரிகிறது. தேவேந்திரர் இயக்கம் என்னவகையானவை என்பதை காலனியாட்சிக்குப் பிந்தைய காலங்களின் செயல்பாடுகளிலிருந்து வரையறுப்பதற்குமுயற்சிக்கலாம்.

மேற்கோள்கள்:

1.G.O. No. 2962, Law (General), 03 November 1922.

2.G.O. No. 304, Law (Legislative), 21 August 1925.

3.Kudiarasu, 01 July 1931, p. 11.

4.Pattali Muzhakkam (September: 1998), p. 6.

5.An undated letter from Kandasamy, Namakkal, to A. Arunachalam, Tiruchirappalli.

6.V. Alex, Karisalil Or Urani (Madurai: Dalit Resource Centre, 1995).

7.G.O. No. 304, Law (Legislative), 08 August 1925.

8.Minute Note of Pandiar Sangam, dated 04 March 1925, p. 1.

9.By-Law of the Indirakulathipa Vellalar Aikya Sangam, 1933.

10.AB.Vallinayakam,‘Muthuveeran Balasundararasu’, Dalit Murasu (February:2003), Vijayadanushu,Tekkam patti Balasundararasu (Tirunelveli:Maruthamalar, 2004)

11.Fortnightly Report, 1936.

12.T.Gnanasekaran, India Sudandiraporun Devendrar kalum (Chennai:Tamizhar Panpattu Samuka Aaivu Mantram, 2000)

13.Interview: Pulavar Ramaiyah (64), Devendrar, Rajendranagar, Palayamkottai, Tirunelveli District, Date:15 March 2005.

14.AB.Vallinayakam,‘Muthuveeran Balasundararasu’, p. 62.

15.Interview: Gurusamy Siddhan (59), Devendrar, Coimbatore, Date:05 December 2005.

16.Saraswathi Menon, ‘Historical Development of Thanjavur Kisan Movement – Interplay of Class and

Caste Factors, Economic and Political Weekly, Vol. XIV, Nos. 7&8 (1979).

17.Pattali Muzhakkam (September: 1998).

18.G.Aloysius, Nationalism without a Nation in India (New Delhi: Oxford University Press, 1997), p. 72.

19.Gnana Prakasam, Social Separatism, Scheduled Castes and the Caste System (New Delhi: Rawat Publications, 1998).

20.G. Aloysius, Religion as Emancipatory Identity (New Delhi: New Age International (P) Limited), 1997.

21.David Mosse,‘Idioms of Subordination and Styles of Protest among the Christian and Hindu Harijan Castes in Tamil Nadu’, Contribution to Indian Sociology, Vol. 28, No. 1 (1994).

22.Emma Sandberg,‘Being a Dalit Woman in Seethaikurichy:Religious Affiliations and Social Situa tions’, in Lars Berge and Gunnel Cederlof, eds., Political Visions and Social Realities in Contemporary South India (Sweeden: Hogskolan Dalarna), 2003.

23.Fortnightly Report, 1945, p. 83.

24.Ghanshyam Shah, Social Movements in India: A Review of Literature (New Delhi: Sage, 2004)

No comments: