Monday, October 25, 2010

How many of us do know the origin of THE DEVENDRAKULA VELALAR

There is a copper plate inscription given by a telugu king who ruled Tamilnadu after defeating the pandyan (pallar)army in the kayathar battle around 1550 AD.The plate mentions in detail that THE TEMPLE IS BUILT AND MAINTAINED BY THE SIVAMADALAYAM WHITCH IS RUN BY THE SIX MAJOR DIVISIONS OF DEVENDRAKULA VELALAR SPREAD BETWEEN THE AREA BOUNDED IN THE NORTH BY THIRUPPATHY HILL (KNOWN IN THEIR TIMES AS VADAVENKATAM)AND IN THE OTHER THREE SIDES BY SEAS FROM THE CONTRIBUTION FROM THE YIELD GOT FROM THIER OWN AGRICULTURE LANDS.EVEN TODAY PEOPLE ESPESIALLY PALLARS AROUND THE AREA OF THIRUCHENDUR DONATE THIER FIRST MEASURE OF PADDY (ONE MARAKKAL) TO THE LORD MURUGA.

நம் ஒட்டு

நம் மக்களிடம் மற்ற சமுதாயத்தில் இல்லாத ஒரு ஒற்றுமை... நாம் எந்த கட்சியையும் சாராது இருப்பது ..நமை போன்ற படித்தவர்கள் சொல்வதை கேட்டு முடிவு எடுப்பது
ADMK DMK இரண்டும் பணம் கொடுக்கும் இதில் நாம் சொல்லும் கட்சிக்குதான் பணத்தை பெற்று கொண்டு ஒட்டு போடுவார்கள் ..
நம் மக்களை பணம் வாங்காத என்று சொன்னால் அது முட்டாள்த்தனம் ஆகிவிடும் ..

எந்த கட்சி அதிக இடம் கொடுக்கிறதோ அதற்கு நம் ஒட்டு என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும் என நன் விரும்புகிறேன்
நாம் ஒட்டு போடும் கட்சி வெற்றி பெரும் கட்சியாக இருக்க வேண்டும் ..அந்த வெற்றி யை தீர்மானிக்கும் சக்தியாக நாம் இருப்போம் என்பதில் சந்தேகம் இல்லை ..
நமது ஓட்டை விஜயகாந்த் போன்ற நேற்று கட்சிக்கும் ..காசுக்காக இனத்தை காட்டி கொடுக்கும் சில தேசிய கட்சிகளுக்கும் போட்டு வீண் பண்ண கூடாது ...
நாம் நமது ஓட்டை வீண் பண்ணினாலும் பரவ இல்லை என்றால் அது முட்டாள் தனத்தின் மறு பிறவி என்பேன்

அதிக இடம் கொடுக்க கட்சிகளை நாம் நெருக்கடிகளுக்கு தள்ள வேண்டும் ...நாம் CM ஆவது முடியாது என்றாலும் நமக்கு சில MLA MP பிரதிநிதிகள் தேவை
நாம் மக்களுக்கு எடுத்து சொல்லும் கருவியாக இருக்க வேண்டும் ..அதற்கு நமது பொருள் ,பணம் ,உழைப்பை போட வேண்டும்

டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி

கர்நாடகா: சில தினங்களுக்கு முன்னர் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வருமான வரிவிலக்கு அளிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். தனக்கு பயிற்சியளித்த தனது தந்தைக்கு ரூ.28.5 லட்சம் கொடுத்ததாகவும், எனவே அத்தொகையை வரிவிலக்கு அளிக்குமாறும் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம் வரிவிலக்கு அளிக்க முடியாது என தீர்ப்பளித்தது.

Monday, October 18, 2010

மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்

நீங்கள் தலித்துகளையும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களையும் ஒரே இனத்திற்குள்
வைத்து பார்த்து குளம்பிக்கொன்டிருக்கிரீர்கள். முதலில் நம்மைப்பற்றியும் நம் வரலாறு பற்றியும்
அறிந்து கொண்டு ஒரு தெளிவு நிலைக்கு வாருங்கள். தலித்துகளுக்கு நேரும் அவலங்களையும்
இழிவுகளையும் மள்ளர்களின் மேல் திணிக்க முயல வேண்டாம். நாம் போரில் தோல்வி அடைந்து
வீழ்த்தப்பட்ட மக்கள். நம் மீது மீண்டும் மீண்டும் எதிரிகளும் துரோகிகளும் கடந்த நானூறு வருடங்களுக்கும் மேலாக
தாக்குதல்களை தொடுத்து வருகின்றார்கள் . அதற்க்கு நாம் பல வழிகளில் அவர்களை எதிர்த்து போரிட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் தலித்துகள் தங்களை தலித் என ஏற்றுக்கொன்டு அடிமையாக வாழ்பவர்கள். அவர்கள் வேறு நாம் வேறு.
நம் மீது எங்காவது வன் தாக்குதல் நடத்தப்பட்டால் தேவேந்திர குலத்தின் மீது தமிழினத்தின் தலைக்குடி மக்களின் மேல் மூவேந்தர்கள் மேல் இன்ன சாதிக்காரன் இப்படியொரு தாக்குதலை நிகழ்த்துகிறான் என்று மட்டும் சிந்தியுங்கள் பதிவும் செய்யுங்கள். ஏனெனில் இத்தனை ஆண்டுகளாக நம் இனத்தின் மீதான தாக்குதல்களை
நாம் மட்டுமே எதிர்க்கொண்டுள்ளோம். வேறு எந்த ---யிரானும் நமக்காக நம்முடன் சேர்ந்து போர் புரிந்தது கிடையாது. உங்களின் அடிப்படைச் சிந்தனைகளை மாற்ற முயற்சி செய்யுங்கள். வாழ்த்துகள்.!

தமிழக வேளாளர்களின் வரலாறு:

தமிழக வேளாளர்களின் வரலாறு: சில ஆய்வுச் சிக்கல்களுக்கு விடை தேடும் முயற்சி (பகுதி 5)
எஸ். இராமச்சந்திரன்

தொண்டை மண்டலத் தண்டலை உழவர்

வேளாண்மை என்றாலே விவசாயம், என்றும் வேளாளர் என்றால் விவசாயி என்றும் பொருள்படுகின்ற நிலைமை கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிவிட்டது. ஏர்க் கலப்பை, வேளாளர் சாதிக் குழுக்களின் அடையாளச் சின்னமாக ஏற்கப்பட்டு, பொதுப் பிரக்ஞையிலும் பதிந்துவிட்டது. சித்திரமேழிப் பெரியநாடு என்ற வேளாளர் தலைமையிலமைந்த சமூகவியல் - அரசியல் நிறுவனத்தின் எழுச்சி இந்தப் பின்னணியில் நோக்குதற்குரியது. கம்பர் எழுதியதாக நம்பப்படும் 'ஏர் எழுபது' வேளாண்மையை அடித்தளமாகக்கொண்ட வேளாளர் சாதிப் பெருமையைச் சிறப்பிக்கும் இலக்கியமே. அப்படியிருக்க, கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரையிலும் காருகவினை எனப்பட்ட நெசவுத் தொழில், வேளாளர் தொழில்களுள் ஒன்றாக நிகண்டுகளில் குறிப்பிடப்படுவதிலிருந்து, விவசாயத் தொழில்புரிவோர் மட்டுமின்றிச் சாலியர், கைக்கோளர் முதலிய சாதியினரும் வேளாளர்களாகவே கருதப்பட்டு வந்தனர் எனத் தெரிகிறது. சங்க இலக்கியங்களில் ஓரிரு இடங்களில் காணப்படுகிற, “ஆதரவற்ற பெண்டிர் தமது சுயமுயற்சியால் நூற்ற நூல்” (ஆளில் பெண்டிர் தாளில் தந்த நுணங்கு நூண் பனுவல் – நற்றிணை 335), "பருத்திப் பெண்டின் பனுவல்" (புறம். 125) போன்ற குறிப்புகளாலும், இலங்கை அரசி யக்ஷிகுவேணியே நெசவைக் கற்பித்தவள் எனக் குறிப்பிடும் இலங்கை வரலாற்றுத் தொன்மக் குறிப்பினாலும், நெசவாளர்களும் வேளாட்டியரின் மக்களாகவே கருதப்பட்டதில் உள்ள தர்க்கபூர்வ உண்மைமை உய்த்துணரலாம்.

ஆனால் இந்நிலை, பருத்தி விளைவிப்பு, நூல் நூற்பு, நெசவு ஆகிய அனைத்தும் ஊர் சார்ந்த நுகர்வுக்குரிய, பணி மக்களாகக் கருதப்பட்ட தாய்வழிச் சமூகக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்தான் சாத்தியம். வணிகத்தின் எழுச்சி காரணமாக, வணிகக் குழுக்களுடன் தம்மைப் பிணைத்துக்கொண்ட நெசவுத் தொழிற்சாதிக் குழுவினர் நெய்யும் நகரத்தார், சாலிய நகரத்தார், கைக்கோள நகரத்தார் போன்ற பெயர்களில் செயல்படத் தொடங்கியதன் விளைவாக வேளாளர் சாதிக் குழுவினருடன் அவர்களை அடையாளப்படுத்துவது நின்றுவிட்டது எனலாம். அதே வேளையில் நீர்ப்பாசனத் திட்டங்கள் பெருமளவில் செயல்படுத்தப்பட்டு, நன்செய் நிலங்கள் உருவாக்கப்பட்டு விவசாய விரிவாக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவாக நிலப்பிரபுத்துவம் இறுக்கமடைந்து சமூக இயக்கமே நிலப்பிரபுத்துவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொணரப்பட்டது. இந்நிலை உருவாவதற்கு வேளாளர் சாதிக் குழுக்களின் பங்களிப்பு முதன்மையான காரணம் என்பதில் ஐயமில்லை.

பயிர் செய்பவன் நிலத்தின் விளைச்சலில் குறிப்பிட்ட பங்கு (கீழ்வாரம்) பெறுகிற உரிமை காராண்மை, காராண் கிழமை என்ற தொடர்களால் கி.பி. 450ஆம் ஆண்டைச் சேர்ந்த பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.1 அரசு முதலிய அதிகார அமைப்புகள் விளைச்சலில் பெருகிற பங்கு மீயாட்சி, மேலாண்மை என்ற பெயர்களில் அக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. கீழ்வாரத்தைக் குறிப்பிடும் காராண்மை என்ற உரிமையின் அடிப்படையிலேயே வேளாளர்களைக் 'காராளர்' என்ற பெயரால் நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. இது கி.பி. 5ஆம் நூற்றாண்டில் – களப்பிரர் ஆட்சியின் விளைவாகத் - திடுமெனத் தோன்றிய நிலைமையா? அல்லது வேளாளர்தாம் காராளர் (பயிர் விளைவிப்போர்) என்ற சமன்பாடு, ஒரு சங்கிலித் தொடரின் ஒரு கண்ணி என்றால் அதன் தொடக்கக் கண்ணி எது? இதனை வேறுவிதமாகக் கேட்பதென்றால், வேளம் என்ற அமைப்பு விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்டதற்கு மறைமுகச் சான்றுகளாகிலும் சங்க இலக்கியங்களில் இருக்கின்றனவா எனக் கேட்கலாம். இக்கேள்விக்கான விடை பெரும்பாணாற்றுப்படையில் உள்ளதெனத் தோன்றுகிறது.

பெரும்பாணாற்றுப்படை, கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற புலவரால் கச்சி (காஞ்சி)யைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவனும், திரையர் குலத்தவனும், தொண்டைமான் என்ற பட்டம் உடையவனும், இளந்திரையன் என்று அழைக்கப்பட்டவனுமான சிற்றரசன் ஒருவனின் ஆட்சிச் சிறப்பையும் அவனது நாட்டின் இயல்பையும் விளக்கிப் பாடப்பட்ட ஓர் இலக்கியமாகும். ஒரு வகையில் பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனின் களவிளம்பரத்துறை –செய்தி மக்கள் தொடர்புத் துறைத் தலைமையலுவலரின் இலக்கியத் தரம் வாய்ந்த அறிக்கை போன்றது. பாட்டுடைத் தலைவனின் ஆட்சிச் சிறப்பைக் கூறிப் பாணர்களை அவனிடம் ஆற்றுப்படுத்தி, அவனது கொடையைப் பெறுவதற்கும் அவனது அரசின் வாயிலோர் பதவிகளில் அமர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்வதற்கும் தூண்டுகிற வகையில் பாடப்பட்டுள்ள இலக்கியமென இதனைக் கருதலாம்.

பெரும்பாணாற்றுப்படையில் இடம்பெற்றுள்ள வருணனைகளில் குறிப்பிடத்தக்கது 320-345ஆம் வரிகள் இடம்பெறுகிற, கடற்கரைப் பட்டினங்களில் இருந்த பரதர் (மீனவர்களும் கடலோடி வணிகர்களும்) குடியிருப்புகள் மற்றும் வாழ்விடம் பற்றிய வருணனையாகும். வடநாட்டு மணி வகைகளும் நுகர்வுப் பொருள்களும் குதிரைகளும் கப்பல்கள் மூலமாக இறக்குமதியாகின்ற துறைமுகங்கள்; மாடங்கள் (மாடி வீடுகள்) நிறைந்த வீதிகள்; பரதர் மலிந்த தெருக்கள்; சிலதர் எனப்பட்ட பணி மக்கள் காவல் காக்கும் உயர்ந்த கிடங்குகளும் பண்டக சாலைகளும்; ஊர் முகப்பிலேயே கிடைக்கின்ற பன்றி இறைச்சியும்; விண்ணை முட்டும் மாடங்களில் பெண்டிர் கழங்காடும் காட்சி – இவ்வாறு தொடரும் வருணனைகள் மூலம் திரையன் என்ற குடிப்பெயருக்கு ஏற்ப இளந்திரையன் கடல் வாணிகத்தில் அதிகக் கவனம் செலுத்தினான் என்பதும், வைசிய வருணம் என்பது வணிகர்களையே முதன்மையாகக் கொண்ட வருணப் பிரிவு என்ற தோற்றம் உருவாகத் தொடங்கிவிட்டதென்பதும் தெளிவாகப் புலப்படுகின்றன.

இதனையடுத்து வேள்வி புரிகின்ற அந்தணர்கள் (வைதிக பிராம்மணர்கள்) குடியிருப்பு வருணிக்கப்படுகிறது. அவர்கள் பறவைப் பெயர்ப்படுவத்தம் (இராஜான்னம்) எனப்பட்ட உயர்வகை அரிசிச் சோற்றை உண்டனர் (வரி 305) என்பது போன்ற விவரங்களிலிருந்து, அவர்கள் ஆந்திரப் பகுதியிலிருந்து குடியேற்றப்பட்டவர்களாக இருக்கலாம் என்றும், இராஜான்னம் என்ற நெல் வகையும் – சாலை வழியாகவோ, கடல் வழியாகவோ - ஆந்திரத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தோன்றுகின்றன. பின்னாளைய பல்லவர்களின் சாசனங்களை ஆதாரமாகக் கொண்டால் இப்பிராம்மணர்கள் இளந்திரையனாலோ அவனுடைய முன்னோர்களாலோ குடியேற்றப்பட்டவர்கள் என்று கருதிட இயலவில்லை; இருக்குவேள் போன்ற வேளிர்களாலோ சோழர்களாலோ குடியேற்றப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.2

இவற்றையடுத்து பெரும்பாணாற்றுப்படையில் முதன்மையாகக் குறிப்பிடப்படுவது, காஞ்சித் திருவெஃகாவிலிருந்த, பாம்பணைப் பள்ளி அமர்ந்த திருமால் கோயிலாகும். (வரி 372-375.) வெஃகா (வேகவதி) ஆற்றின் பூமலி பெருந்துறையில் இளவேனிற் பருவக் காதல் நுகர்ச்சியில் ஈடுபடுவோர் பற்றிக் குறிப்பாகச் சுட்டிச் செல்லும் உருத்திரங் கண்ணனார், 'அருந்திறக் கடவுளை' வாழ்த்திப் பாடுமாறு யாழ்ப் பாணனைக் கேட்டுக்கொள்கிறார். தொண்டைமான் மன்னன் ஒருவன் காஞ்சிப் பகுதியில் வைணவ சமயத்தின் தோற்றுவாய்க் காலத்தில் திருமாலடியானாக இருந்தான் என்பது வைணவ சமய நூல்களிலும் பதிவு பெற்றுள்ளது. இருப்பினும், இத்தகைய வருணனைகளில் இறங்கும் உருத்திரங் கண்ணனார் காஞ்சிக் கடிகை பற்றியோ, பௌத்தப் பள்ளிகள் – விகாரைகள் பற்றியோ, ஜைனப் பள்ளிகள் குறித்தோ ஒருவரிகூடக் குறிப்பிடவில்லை.3 இது அவரது வைதிகச் சமயச் சார்பினால்தான் என்று தோன்றுகிறது. ஆயினும் இக்காரணத்தைக் கொண்டு அவருடைய பிற வருணனைகளை நாம் புறந்தள்ளிவிட இயலாது. குறிப்பாக, தொண்டை மண்டல உழவர்கள் பற்றிய அவருடைய வருணனைகள் விரிவாக ஆராயத் தக்கவை.

மூன்று வகைப்பட்ட உழவர்கள் பெரும்பாணாற்றுப்படையில் இடம்பெறுகின்றனர். முதலாவதாக, வன்புலத் துடவை உழவர்கள். (வரி 191-205.) இடையர்களின் வாழ்விடங்களையடுத்தும், முள்வேலி சூழ்ந்த “எழுகாடோங்கிய தொழுவுடை வரைப்பு” எனப்ப்டும் இருப்பிடத்தையொட்டியும் துடவையுழவர்கள் வாழ்ந்தனர். “தொழுவுடை வரைப்பு” என்பது “இளங்காட்டையுடைய படைத் தலைவர் இருப்பு” என உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பொருள் கொள்கிறார்.4 துடவையுழவர்கள் வாழ்விடம், வரகு வைக்கோல் வேய்ந்த குடியிருப்புகளைக் கொண்ட சிற்றூர்களே.5 பெரிய எருதுகள் பூட்டப்பட்ட ஏர்க்கலப்பையால் உழப்படும் நிலத்தில் அவரை விதைக்கப்படும். இவர்களின் வீடுகளில் வரகரிசிச் சோறும், அவரைப் பருப்பும் முதன்மையான உணவாகக் கொள்ளப்பட்டன.

இத்துடவை உழவர்களை புறநானூற்றில் (பா.335) குறிப்பிடப்படும் முல்லை நிலக்குடிகளான துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகியோருள் உழுகுடிகளாகத் தொடர்கிற பறையர்களுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பது பொருத்தமாகும். மேற்குறித்த புறப்பாடலில் வரகு, அவரை, தினை, கொள்ளு ஆகியனவே உணவாகக் குறிப்பிடப்படுகின்றன என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது. வாகைத் திணை, மூதின் முல்லைத் துறையிலமைந்த மேற்சுட்டிய புறப் பாடலில் பகைவர்களை எதிர்த்து அவர்களின் யானையை வீழ்த்தித் தானும் வீழ்ந்த வீரனின் நடுகல் வழிபடப்படுவதும் ஒரு முதன்மையான வாழ்வியல் கூறாகக் குறிப்பிடப்படுகிறது. “களிறு எறிதல்” என்பதைப் பிற்கால இலக்கண மரபு பரணிப் பாடலாக வகைப்படுத்தினாலும், நடுகல் வழிபாட்டினை, மாடுகளைப் பராமரிக்கும் வாழ்நிலையைச் சேர்ந்தவர்களுக்குரிய கரந்தைத் திணை மரபாகவே தொல்காப்பியம் சித்திரிக்கிறது.6 நடுகல் மரபின் பல கூறுகள், களிறெறிந்தவனாகவும் (கஜசம்ஹார மூர்த்தி) 'கரந்தை' சூடியவனாகவும்7 சித்திரிக்கப்படும் சிவ பிரானது முதன்மையான வடிவமாகிய 'கந்து' (உருவமற்ற கல்தூண்) வழிபாட்டு மரபில் கலந்துவிட்டன. நடுகல் வீரன் கோரக்கன அல்லது கோர்க்கா (ஆனிரை காவலன்) வடிவ வைரவ மூர்த்தத்துடன் இணைந்து கயிலைவாசி ஆயினான். மட்டுமின்றி, புதிய கற்கருவிப் பயன்பாட்டுப் பண்பாட்டு நிலையிலேயே காளையை வென்றடக்கித் தொடக்க நிலை விவசாய முயற்சிகளில் காளையை ஈடுபடுத்திய கூற்றுத் தெய்வத்தின் முழுமையான பரிணாம வளர்ச்சியடைந்த வடிவமாகிய சிவ பிரானின் பல பெயர்களுள் 'சம்பு' என்ற பெயர் முதன்மையானது. பறையர் சமூகத்தவர்க்கு வழங்குகிற சாம்பவர் என்ற பெயர் சம்பு மரபினர் என்ற பொருளுடையதே.

இத்துடவை உழவர்களின் உணவில் புலால் இடம் பெற்றிருந்ததாகத் தெரியவில்லை. இது சமண சமயத்தின் தாக்கத்தால் நேர்ந்ததா என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலாதது. அவ்வாறாயின், வள்ளுவர் சமூக உருவாக்கம் குறித்த ஆய்வுடனும் இக்கேள்வி தொடர்புடையதாகிறது. இது தவிர, படைத் தலைவர் இருப்பினையொட்டி இத்துடவை உழவர்களின் வாழ்விடம் அமைந்திருப்பது (நச்சினார்க்கினியரின் உரையை அப்படியே ஏற்பதாயின்), கி.பி. 12-13ஆம் நூற்றாண்டுகளில் தொண்டை மண்டலத்தின் பல ஊர்களில் நிலை கொண்டிருந்த பரிக்கிரகங்கள் எனப்படும் போரவைகள், குறிப்பாக முறையான படைப்பயிற்சியளித்த வலங்கைப் படைப்பிரிவின் பல்வேறு ஆக்கங்கள் ஆகியவற்றின் வரலாற்றுடன் தொடர்புடைய முன்னிகழ்வு ஆகலாம். பறையர் சமூகத்தவர், வலங்கைப் படைப் பிரிவுகளுடன் தொடர்புடையோரே என்பதற்குப் பிற்கால ஆதாரங்கள் உள்ளன. முழுமையான தெளிவு ஏற்படாத, நீடிக்கின்ற சிக்கல்களுடன்கூடிய ஆய்வுக் குறிப்புகளாயினும், இத்தகைய குறிப்புகளின் பின்னணியில் பார்க்கும்போது இத்துடவை உழவர்கள் (பறையர் சமூகத்தவர்) வைஸ்ய வர்ண அந்தஸ்துக்குரியோராகக் கருதப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது; சூத்திர வர்ணத்தவராகவோ, புலைச் சாதியினராகவோ கருதப்பட்டிருக்க இயலாது.

பெரும்பாணாற்றுப்படை (வரி. 211-252) வருணிக்கும் இரண்டாம் வகை உழவர்கள், நீர் வளம் மிகுந்த, குளிர்ந்த பண்ணை நில இருக்கைகளைச் (தண்பணை தழீஇய தளரா இருக்கை) சார்ந்தவர்கள். 'செறு' எனக் குறிப்பிடப்படும் சேறு நிரம்பிய வயல்களில் தொளியை விரவி நாற்று நடுவோராக இந்த 'வினைஞர்'கள் குறிப்பிடப்படுகின்றனர். இப்பகுதியிலுள்ள ஊர்கள், பசியறியாத வளமான நிலைத்த இருக்கைகளைக் (தொல்பசியறியாத் துளங்கா இருக்கை) கொண்ட பேரூர்களாகும். இப் பேரூர்களிலுள்ள 'நல்லில்' எனப்படும் பெரிய வீடுகளில் உள்ள குழந்தைகள், தச்சச் சிறுவர்கள் செய்துதந்த சிறு தேர்களை உருட்டி விளையாடிக் களைத்து, செவிலித் தாய்மாரிடம் பாலருந்திவிட்டு அமளியில் துயிலும் இக்குழந்தைகளின் பெற்றோர்பற்றி உருத்திரங் கண்ணனார் குறிப்பிடவில்லையாயினும் அவர்கள் ஊரன், மகிழ்நன் என்ற பெயர்களால் குறிப்பிடப்பட்ட மருத நிலத் தலைமக்களாகவே இருக்க இயலும். மருத நில வினைஞர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே இத்தலைமக்களது குடியிருப்புகள் தளரா இருக்கை, துளங்கா இருக்கை எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. கி.பி. 8-9ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் – செப்பேடுகளில் - ஊர், ஊரிருக்கை, மனை ஆகியன ஒரே குடியிருப்புப் பகுதிகளிலிருந்த வெவ்வேறு வகை வசிப்பிடங்களாகப் பிரித்துக் காட்டப்பட்டுள்ளன.8 எனவே, இத்தகைய நிலைத்த இருக்கைகளின் உடைமையாளர்கள், நிலைமையாளிகள், கருங்கை வினைஞர்களிலிருந்து வேறுபட்ட வர்க்கத்தவரென்றே கருத வேண்டியிருக்கிறது. காஞ்சிக்கு அருகிலுள்ள ஓரிருக்கை எனத் தற்போது வழங்குகின்ற ஊரிருக்கை, இந்நிலைமையாளர்களின் குடியிருப்புகளுள் ஒன்றெனக் கருதலாம் (வைணவ மரபில் 'ஓரிரவு இருக்கை'யே 'ஓரிருக்கை' எனத் திரிந்ததாக நம்பப்படுகிறது.)

இம்மருத நிலப்பகுதியில் நெல்லரிசிச் சோற்றுடன், வீடுகளில் வளர்க்கப்படும் கோழியின் வாட்டப்பட்ட இறைச்சி கிடைக்கும். இங்கு கரும்பைப் பிழிந்து சாறெடுத்துக் கருப்பங்கட்டி (விசயம்) தயாரிக்கும் ஆலை உண்டு. கரும்பு அறுவடை எந்தப் பருவத்தில் நடைபெற்றது என நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால், வினைஞர் செந்நெல்லினை அறுவடை செய்து போரடித்துத் தூற்றுவது மேல் திசைக் காற்று (குட காற்று எனப்படும் கோடைக்காற்று) வீசுகிற பருவத்தில் நடைபெறும் எனப் (வரி 239-240) பதிவு செய்யப்பட்டிருப்பதால்9 இளவேனிற் பருவத்தில்தான் கரும்பு அறுவடையும் நடைபெற்றிருக்கும் எனக் கருதலாம்.

கருங்கை வினைஞரால் செந்நெல் அறுவடை செய்யப்பட்ட பின்னர் மருத மரத்தின்கீழ் தெய்வத்திற்குப் பலிகொடுக்கப் பயன்படுகிற களத்தில் நெற்கதிர்களைக் குவித்து மாடுகளை விட்டுப் போரடித்து பொலிதூற்றிக் குவிக்கப்படும் என்ற செய்தி (வரி. 230-241) தெரியவருகிறது. மருத நில உழவர்களான மள்ளர்கள் சித்திரை மாதத்தில் பூக்கின்ற மருத மரத்துக்கும் அதன் தெய்வமான இந்திரனுக்கும் நடத்திவந்த தொல் பழங்காலப் பூப்பு விழாவின் எச்சமே இவ்வாறு பதிவு பெற்றுள்ளது. இது பெருவிழாவாக நடைபெறவில்லை என்பதாலும் கருங்கை வினைஞர்களால் மட்டுமே இவ்வழிபாடு மேற்கொள்ளப்பட்டது என்பதாலும் இதன் வரலாற்றுப் பாரம்பரியத்தை நாம் புறக்கணித்துவிட முடியாது. 'ஸக்ர' என்ற சம்ஸ்கிருதச் சொல், மருத மரத்தைக் குறிக்கும்.10 பௌத்த நூல்கள் இந்திரனை ஸக்ரன் (பிராகிருத வழக்கில் ஸக்கன்) அதாவது, மருதன் என்றே குறிப்பிடும்.11 மருத மரத்தை அர்ஜுன விருட்சம் என்றும் சொல்வதுண்டு. தொண்டை மண்டலத்தை ஒட்டியுள்ள ஆந்திர மாநிலப் பகுதியில் மல்லிகார்ஜுனர், நாகார்ஜுனர் என்ற பெயர்களில் மருத மர வழிபாட்டு எச்சங்கள் நீடித்து வருவது கவனிக்கத்தக்கது. இந்திர வழிபாட்டு மரபுகள் பல, சிவ வழிபாட்டில் கலந்துவிட்ட நிலையில் இத்தகைய எச்சங்களாக நீடிக்கின்றன. அதே வேளையில், காஞ்சிப் பகுதியில் உத்தரமேரூர் வட்டத்தில் அமைந்துள்ள பெருநகர் என்ற ஊரில், கி.பி. 18ஆம் நூற்றாண்டு வரையிலும் தேவேந்திரன் கோயில் இருந்துள்ளது என ஓர் ஆவணக் குறிப்பு தெரிவிக்கிறது.12 அர்ஜுன வழிபாட்டு எச்சங்களுடன் இது இணைத்து ஆராயப்பட வேண்டும்.13

நன்செய்ச் 'செறு வினைஞர்'கள் மள்ளர்களே என பெரும்பாணாற்றுப்படை நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால், தொண்டைமான் இளந்திரையன், “மள்ளர்களை வென்ற வீரன்” எனப் பொருள்படும் வகையில் “மள்ளர் மள்ளன்” என வருணிக்கப்படுகிறான். (வரி. 455.) கி.பி. 12ஆம் நூற்றாண்டில் சேக்கிழார், “கோடைக்காலத்தில் பாலாற்றின் மணல் திட்டுக்களை மள்ளர்கள் தோண்டி வாய்க்கால்களை உருவாக்கி, வயலுக்கு நீர்ப்பாய்ச்சுவர்” எனக் குறிப்பிடுகிறார்.14 மேற்குறித்த 'ஊரிருக்கை' பாலாற்றின் கரையில் அமைந்திருப்பது கவனத்திற்குரியது. “தீம்புனல் உலகம்” எனத் தொல்காப்பியம் வகுக்கிற இலக்கணத்துக்குத் தக, இத் “தண்பனை தழீஇய தளரா இருக்கை” அமைந்திருப்பது பொருத்தமானதே.

இந்த இடத்தில் முதன்மையான ஒரு கேள்வி எழுகிறது. எலும்பினாலான வஜ்ராயுதத்தினை அல்லது கொம்பினாலான மழுவாளினை ஆயுதமாகக் கொண்ட மழைக் கடவுளான இந்திரன்,15 ஆறுகளிலிருந்து வாய்க்கால்கள் வெட்டி ஆற்றுநீர்ப் பாசனத்தின்மூலம் விவசாயம் செய்கிற உலோக காலப் பயன்பாட்டு நிலைக்கு முற்பட்ட ஒரு சமூகத்தின் தலைமைத் தெய்வப் பதவியை வகித்தவன். இந்திரனைத் தமது குல முதல்வனாகக் கருதிய மள்ளர்கள் உலோகப் பண்பாட்டு நிலைக்கு முற்பட்ட பூர்வ குடிகளே என்பதில் ஐயமில்லை. அப்படியாயின், உலோகப் பண்பாட்டு நிலைச் சமூகத்தவரால் – அவர்களே ஊரன், மகிழ்நன் மரபினர் என வைத்துக் கொண்டால் - மள்ளர் சமூகத்தவருடன் நிகழ்த்தப்பட்ட போர்கள், உடன்பாடுகள், உட்கிரகிப்புகள் போன்றவை குறித்த தடயங்கள் – தொன்ம வழக்கிலாகினும்- உள்ளனவா என்ற கேள்வி எழுகிறது. “மழைபிணித்தாண்ட மன்னவன்” பற்றிய கதைகளும்,16 மேகம் சிறை கொண்ட ஐயனார் பற்றிய தல புராணங்களும்17 இதற்கு விடையாக அமைகின்றன. நீர்ப்பாசன முயற்சிகளை இத்தகைய தொன்மக் கதைகள் உருவகமாகக் குறிப்பிடுகின்றன எனில், குளங்கள் போன்ற இயற்கையான நீர்நிலைகளில் தண்ணீர் வற்றத் தொடங்கும்போது அவற்றின் படுகைகளில் வளர்கிற குளநெல் அல்லது 'நீர்வாரம்' என்ற காட்டு நெல் வகை18யைப் பூர்வகுடி மள்ளர்கள் இளவேனிற் பருவத்தில் அறுவடை செய்து பயன்படுத்திய உலோகப் பண்பாட்டுக் காலகட்டத்திற்கு முற்பட்ட மருத நில நெற்பயிர் விவசாயம் எனலாம். இந்நெற்பயிர், சங்க காலத்திலும் பாண்டிய நாட்டில் 'பேரில்' அரிவையரால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது புறநானூற்றிலும் குறிப்பிடப்படுகிறது.19 இப் 'பேரில்'களுக்கு உரியோர், வைஸ்ய வருண அந்தஸ்துக்குரிய, ஐயனார் வழிபாட்டுக் குழுவினராகலாம். தொண்டை மண்டலத்தின் மருதநிலப் பகுதிகளில், கோடை நீடித்தாலும் நீர் குறையாத குளங்கள் இருந்தன. அக்குளங்களின் கரையைக் காக்கின்ற வலைஞர்கள் இருந்தனர். (பெரும்பாண். 272-274.) இக்குளக்காவல் முறையே பின்னாளைய ஏரி வாரியங்களின் முன்னோடியான நீர்ப்பாசன - நிலவருவாய் நிர்வாக முறையாகும்.

மேற்குறித்த இருவகை நிலங்களிலும் இருந்த உழவர்கள் பற்றிய விவரங்களின் மூலம் அவர்களை முறையே பறையராகவும் மள்ளராகவும் நாம் அடையாளம் காண இயலும். தொண்டை மண்டலத்தில் தற்போதைய நிலையில் மள்ளர் குலத்தவர்கள் இல்லையென்றாலும் ஆந்திர மாநிலத்தில் 'மாலர்' எனப்படும் சமூகத்தவர் உள்ளனர். இந்திர வழிபாட்டு மரபின் எச்சங்கள் மாலர் சமூகத்தவரிடையே உள்ளனவா என்று ஆராய்ந்து மள்ளர் - மாலரிடையே உள்ள உறவினை உறுதிப்படுத்தலாம். சித்திரமேழிப் பெரிய நாட்டாரின் எழுச்சிக்குப் பின்னர் – கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் மள்ளர் சமூகத்தவர் தொண்டை மண்டலத்தை ஒட்டியுள்ள ஆந்திர மாநிலப் பகுதிகளுக்கும் கொங்கு நாட்டின் சில பகுதிகளுக்கும் குடியேற்றப்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உண்டு. இது ஒருபுறமிருக்க, பெரும்பாணாற்றுப்படையில் மேற்குறித்த இருவகை நிலங்களின் தலைமக்கள் குறித்த விவரம் ஏதும் தெரிவிக்கப்படாததன் காரணம், அவர்கள் தொண்டைமான் இளந்திரையனின் குலத்தவராகக் கருதப்படாமல் வருணத்தாலும் குலத்தாலும் வேறுபட்டவர்களாகக் கருதப்பட்டதாலோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

இனி, பெரும்பாணாற்றுப்படை (வரி. 352-371) வருணிக்கும் மூன்றாவது வகை உழவர்கள், “தண்டலை உழவர்கள்” ஆவர். தண்டலை உழவர் என்பதற்கு, “தோப்புக் குடிகள்” என்று நச்சினார்க்கினியர் விளக்கமளிக்கிறார். அதாவது, தோட்டப்பயிர் விவசாயிகள் என்று பொருள். நெய்தல் நிலப் பட்டினங்களுடன் தொடர்புடைய பாக்கங்கள் இவர்களுடைய ஊர்களாகும். தென்னை மட்டை வேய்ந்த, பூந்தோட்டம் சூழ்ந்த தனிமனைகளில் இவர்கள் வசித்தனர். “மஞ்சள் முன்றில் மணம் நாறும் படப்பைத் தண்டலை” எனக் குறிப்பிடப்படும் இத்தோட்டங்களில் பலா, வாழை முதலிய கனி தரும் மரங்களும் தென்னை, பனை, கமுகு முதலிய மரங்களும் வளர்க்கப்படும். இவற்றின் விளை பொருள்களும் கிழங்குகளும் இவர்களின் முதன்மையான உணவு ஆகும். இடையறாத விளைச்சலைக் கொண்ட பல மரங்கள் நிற்கும் நீளிடை, விண்முட்டும் மாடங்களைக் கொண்ட நன்னகர்கள், வள்ளிக் கடத்தாடும் குடிகளையுடைய பல நாடுகள் – என இப்பகுதி வருணிக்கப்படுகிறது. 'நாட்டார்' எனப் பின்னாளைய சாசனங்கள் குறிப்பிடுகின்ற வேளாண் மாந்தர்கள் இவர்களே என நாம் ஊகிக்கலாம். பின்வரும் காரணங்கள் பரிசீலனைக்குரியன:

1. கிழங்குகள் கொட்டைகள் போன்றவற்றை விதைத்து மரம் வளர்த்தல் தோட்டப்பயிர் விவசாயத்தின் தொடக்க நிலையாகும். தோட்டப்பயிர் விவசாயம் பெண்டிரால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது மானிடவியலர் கருத்தாகும்.20 காஞ்சி காமாட்சி, மாமரத்தின் கீழ் தவம் செய்ததாகவும் அதனால் மாங்காடு காமாட்சி என அவள் பெயர் பெற்றதாகவும் அம்மாமரத்தின் கீழ் காமாட்சிக்குக் காட்சியளித்த சிவ பிரான் ஏக ஆம்ரர் (ஒற்றை மாமரத்தான்) என பெயர் பெற்றதாகவும் தொன்மக் கதைகள் தெரிவிக்கின்றன. பெரியபுராணம் (மும்மையால் சருக்கம், பா. 163) இதனை “மா அமர்ந்த இருக்கை” எனக் கூறுகிறது. பெரியபுராணம் நிலப்பிரபுத்துவத்தின் வளர்ச்சி நிலையில் எழுதப்பட்ட நூலாதலால் காமாட்சியன்னையை மாங்கொட்டையைப் பதித்து மாந்தோட்டம் வளர்த்துப் பராமரிக்கும் தோட்டப்பயிர் விவசாயத்துடன் தொடர்புபடுத்தாமல், நெல் விதைகளை வேளாளர்கட்கு காமாட்சியன்னை வழங்கிப் பயிர்செய்து அறம் வளர்க்கக் கற்பித்ததாகச் சித்திரிக்கிறது. (மும்மையால் சருக்கம், பா. 180-181.)

2. பக்தி இயக்கம், பௌத்த - சமண மரபுகள் மற்றும் வழிபாட்டு நெறிகளின் மூலக்கூறுகளைச் சுவீகரித்துச் சைவ - வைணவ நெறிகளாக்கிற்று. பெரியபுராணம் முன்னிலைப்படுத்திய “அறம் வளர்த்த அன்னை” என்ற படிமம், பௌத்த சமய மணிமேகலையின் படிமத்தை மூலமாகக் கொண்டதே என்பதை முன்னர் கண்டோம். விவசாயத்தை அறிமுகப்படுத்திய பெண்மணி என்ற படிமம், நாகராஜ தரணேந்திரனின் மனைவியாக சமண சமயம் சித்திரிக்கிற பத்மாவதி யக்ஷியின் படிமத்தை மூலமாகக் கொண்டதாகும்.21 சங்க இலக்கியங்களில் “பொலம்புனை நாஞ்சிற் பனைக் கொடியோன்” எனக் குறிப்பிடப்படும் வெள்ளை நாகன் – பலதேவன்தான் ஜைன சமயத்தில் நாகராஜ தரணேந்திரன் எனப்படுகிறான். பத்மாவதி யக்ஷி குறித்த ஜைன சமயத் தொன்மங்கள் வைணவ சமயத்தால் சுவீகரிக்கப்பட்டுத் திருமலை - திருச்சானூர் திருத்தலப் புராணம் போன்ற வைணவத் தொன்மங்களில் நீடிக்கின்றன. பெரியபுராணம் (மும்மையால் உலகாண்ட சருக்கம், பா. 165) காமாட்சியன்னை காஞ்சியில் கடுந்தவம் புரிந்த கதையை விவரிக்கும்போது, பதுமா மாநாகம், தனது பிலத்தினைக் (பாதாள உலகமான நாக லோகத்திற்குச் செல்லும் வாயிலான புற்றினை) காமாட்சியன்னை தனது இருப்பிடமாகக் கொள்ளுமாறு விண்ணப்பித்ததாகக் கூறுகிறது. தொண்டை மண்டலத்திலும் ஆந்திரப் பகுதிகளிலும் சேஷாசலம், அஹோபிலம் போன்ற இடப்பெயர்கள் வழக்கிலிருப்பதும், பிலவாயில் (வாயிலுள்) போன்ற பெயர்கள் கல்வெட்டு வழக்கில் இடம்பெற்றிருப்பதும் நாக குலத் தொடர்பு இப்பகுதி மக்களின் பிரக்ஞையில் நீடித்திருப்பதைப் புலப்படுத்தும். தொண்டைமான் இளந்திரையன் குறித்த தொன்மக் கதைகளிலும் நாக குலப் பெண் மூதாதை இடம்பெறுகிறாள்.

3. சம்ஸ்கிருத மொழியில் தண்டலை என்பதற்குச் சமமான பொருளுடைய ஒரு சொல், 'வேலம்' என்பதாகும்.22 இச்சொல், யாழ்ப்பாணத் தமிழிலும் வழங்கிற்று.23 இது 'வேளம்' என்ற சொல்லின் உச்சரிப்புத் திரிபே எனத் தோன்றுகிறது. பாலுணர்வை வெளிப்படுத்துவதிலும் துய்ப்பதிலும் கட்டுப்பாடற்ற பெண்ணைக் குறிப்பதற்கு 'வேலஹல்லா' என்ற சொல் சம்ஸ்கிருத்ததில் பயன்படுத்தப்படுகிறது.24 சமூகத் தலைமைப் பதவி வகித்த, சுதந்திரமான போக்குடைய பெண்ணைக் குறித்த – கணத்தலைவி என்ற பொருளுடைய- கணிகை என்ற சொல், கால வளர்ச்சியில் விலைமகள் என்ற பொருளைப் பெற்றுவிடுவதைப்போல, பெண் தலைமைச் சமூக அமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட தோட்டம் அமைத்தல் என்பது, வேளம் என்ற நிறுவனம் நடைமுறைக்கு வந்த பின்னர் அதனோடு தொடர்புடைய 'வேலம்' என்ற பெயரைப் பெற்றிருக்கலாம்.

பெரும்பாணாற்றுப்படை என்ற நூல் தலைப்பில் இடம் பெற்றுள்ள பெரும்பாணர்கள், பிற பாணர்களிடமிருந்து வேறுபட்ட, வேளாண் வாயிலோராக உருவாகத் தொடங்கிவிட்ட பாணர்களாகலாம். சிறுபாணாற்றுப்படையில் வரி 25இல் சீறியாழ்ப்பாண (சிறிய யாழினை இசைக்கும் பாணனே) என்ற விளித்தொடர் இடம் பெற்றுள்ளதைப் போன்று இந்நூலில், 'பேரியாழ்ப்பாண' என்ற தொடர் இடம்பெறவில்லை. எனவே, உழவுக்குரிய நிலம் வழங்கப்பட்டு வேளத்துப் பிள்ளைகளாக்கப்பட்ட பாணர்களே பெரும் பாணர் எனக் குறிப்பிடப்பட்டனர் எனத் தோன்றுகிறது. பொருநராற்றுப்படையில் (வரி. 167-173) இடம்பெறும் குறிப்பும் அதற்கான உரையும் இது தொடர்பாகப் பரிசீலிக்கத்தக்கன:

- - - - - வீறு பெறு
பேரியாழ் முறையுளிக் கழிப்பி நீர்வாய்த்
தண்பணை தழீஇய தளரா இருக்கை
நன்பல்லூர நாட்டொடு நன்பல்
வெரூஉப் பறைநுவலும் பரூஉப் பெருந்தடக்கை
வெருவரு செலவின் வெகுளி வேழம்
தரவிடைத் தங்கலோ இலனே

கரிகால் சோழனிடத்துப் பரிசில் பெறுவதற்குச் செல்லும் பாணனுக்குக் கரிகாலன் செய்யும் சிறப்பு முதலில் குறிப்பிடப்படுகிறது. “வீறு பெறு பேரியாழ் முறையுளிக் கழிப்பி” என்ற தொடருக்கு, “ஏனை யாழ்களில் வீறு பெற்ற யாழ்ப்பாணர்க்குக் கொடுக்கும் முறைமைகளைத் தந்துவிட்டு” என்று நச்சினார்க்கினியர் உரை கூறியுள்ளார்.25 அதாவது, “பேரியாழ் முறை” என்பதற்கு, “பெரும் பாணர்க்குரிய மரியாதை” என்று பொருள் கொண்டுள்ளார். அடுத்து அமைந்துள்ள பாடல் வரிகளுக்கு, “கரிகாலன் காலந்தாழ்த்தாமல் மருத நிலம் அமைந்த நாடும் யானைகளும் வழங்குவான்” என்பது பொருளாகும்.26 இவ்வாறு விளை நிலங்கள் வழங்குவது என்பது 'காராண்மை' உரிமையையே குறிக்கும் போலும்.

மேலே எடுத்துக்காட்டிய பாடல் வரிகளுக்கு முன்னர், கரிகாலன் பாணர் கூட்டத்தைச் சேர்ந்த பாடினிக்குத் தலையில் பொற்றாமரைப் பூச்சூட்டுதல், முத்துமாலையைப் பாடினி அணியக் கொடுத்தல் ஆகிய நிகழ்வுகள் கூறப்படுகின்றன. (வரி. 159-163). இவ்வாறு பாடினிக்குப் பொற்றாமரைச் சூட்டுதல் என்பது, பூத்தரு புணர்ச்சி எனப்படும் பழமையான களவு மண மரபின் சடங்கு வடிவமாகும். சங்க கால அரசர்கள் பாடினியருடன் களவு மணம் – சட்டப்படி மனைவி என்ற அந்தஸ்திற்கு உரிமை கோரமுடியாத மணம் – புணர்தல் பதிற்றுப்பத்தில் (வரி. 7-9) பின்வருமாறு பதிவு பெற்றுள்ளது:

ஆடு நடையண்ணல் நின் பாடுமகள் காணியர்
காணிலியரோ நிற்புகழ்ந்த யாக்கை
முழுவலி துஞ்சு நோய்தபு நோன்றொடை

“வீரர்களெல்லாம் புகழ்தற்குக் காரணமாகிய உனது நோயற்ற வலிமையான கட்டுடலை உன்னைப் புகழ்ந்துபாடும் பாடினி காண்பாளாக” - என்பது இதன் பொருளாகும்.27 இது புணர்ச்சி குறித்த சங்கேத மொழியாகும். வேளாண் பெருநெறி எனத் தொல்காப்பியம் (களவியல்) குறிப்பிடும் வழக்கம் இதனோடு ஒப்பிடத்தக்கது.

இவ்வாறு பாணர்கள் வேளத்துப் பிள்ளைகளாக ஆவது என்பது சுதந்திரமான – வைசிய - வருண அந்தஸ்தைக் கைவிட்டுச் சூத்திர அந்தஸ்தை அடைவது என்ற வகையில் இகழ்ச்சிக்குரியதாகக் கருதப்படவில்லை. ஏனெனில் ஓர் ஊரில் நிலைத்த குடிகளாக மாறுவது என்பது ஒருவகையில் உயர் தகுதியடைவதுதானே? மதுரைக் காஞ்சியில் (வரி. 340-42), “வையை யாற்றின் (மருத முன்) துறைகள் தோறும் பூந்தோட்டங்கள் சூழ்ந்த தண்டலைகளில் நிலைத்திருந்த பெரும்பாணர் இருக்கை” (அவிரறல் வையைத் துறைதுறை தோறும் பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி அழுந்துபட்டிருந்த பெரும்பாணிருக்கை) குறிப்பிடப்படுகிறது. இத்தகைய வேளாளர்கள், சூத்திர வர்ணத்தவராக இருந்தாலும் அரசர்களால் விரும்பப்படும் 'வீழ்குடியுழவர்களாக'க் கருதப்பட்டனர் என்பது சிலப்பதிகாரத்தில் (5:42-43) பதிவு பெற்றுள்ளது. 'வீழ்குடியுழவர்' என்பதற்கு “யாவரும் விரும்பும் குடி” என்றும் “வேளாண் சாமந்தர்” என்றும் அடியார்க்குநல்லார் உரை எழுதியுள்ளார்.28 சாமந்தர் என்பது சிற்றரசர்களைக் குறிக்கும். சிலப்பதிகாரக் காலத்தில் (கி.பி. 5ஆம் நூற்றாண்டு) வேளாளச் சிற்றரசர்கள் உருவாகிவிட்டனர் என்பது ஏற்கத்தக்கதேயாயினும், மறையோர் இருக்கையை அடுத்துக் குறிப்பிடப்படும் வீழ்குடியுழவர் வசிப்பிடம், உயர் வர்ணத்தவரால், குறிப்பாக அரச வர்ணத்தவரால் விரும்பப்படும் வேளாண்குடி உழவர்களின் வசிப்பிடம் என்று பொருள்படுமேயன்றிச் சிற்றரசர்கள் வசிப்பிடம் என்று பொருள்படாது. மேலும், சோழ நாட்டில் பெரும் பாணர்கள், மருத நிலம் சார்ந்த உழுகுடிகளாக (பரப்பு நீர்க் காவிரிப்பாவைதன் புதல்வர்) மாறிவிட்டனர் என்று, பொருநராற்றுப்படையிலிருந்து மேற்கோள் காட்டப்பட்ட வரிகளிலிருந்து ஊகிக்க முடிகிறதெனில், தொண்டை நாட்டில் தண்டலை உழவர்களாக உருவாயினர் என்றும் ஊகித்துப் புரிந்துகொள்ளலாம். இவ்விரண்டு பிரதேசங்களிலும் வேளாண்குடி உருவாக்கம் என்பது வேளம் என்ற நிறுவனத்தின் மூலமே ஏற்பட்டது என்பதே அடிப்படையான உண்மையாகும்.

பெருங்கதை, கி.பி. 7-8ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட நூலாக இருக்கலாம். அந்நூலில், (3:3:57-65) “அறத்துறை என்னும் வண்டியின் நுகத்தடியைத் தாங்குபவர்கள், அரசன் மகிழ்ந்தாலும் சீற்றங்கொண்டாலும் தவிர்க்கப்பட இயலாதவர்கள்; நன்செய் நிலத்துக்குரிய நிலைத்த தொழிலாகிய உழவினை மேற்கொள்பவர்கள்; ஆய்ந்தறிந்த சொற்களைப் பேசுபவர்கள்; நிறைந்த ஆய்வு நோக்குடையவர்கள்; பெருங்கடியாளர்கள்” என்று வேளாளர்கள் வருணிக்கப்படுகின்றனர். இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள 'பெருங்கடியாளர்கள்' என்பது, “தலை மக்களின் களவு மணத்துக்குரியவர்கள் என்று பொருள்படும் போலும்.29 இராஜகிருஹ நகரில் 'போகச்சேரி' எனப்படும் கணிகையர் வாழ்விடத்தையடுத்துப் பெருங்கடியாளர் வாழ்விடமான அருங்கடிச்சேரி (மிகுந்த காவலுடைய அந்தப்புரம்)30 இருந்ததாகப் பெருங்கதை குறிப்பிடுவதால் இவ்வாறு பொருள்கொள்வதே பொருத்தமாக உள்ளது.

தொண்டை மண்டலத்தில்தான் வேளாண் மாந்தரின் குடியேற்றம் தொடக்கத்தில் உருவாயிற்று என்று கொங்கு நாட்டுப் பழம் பாடல்கள் குறிப்பிடுகின்றன.31 24 கோட்டங்களும் 79 நாடுகளும் வேளாளர்களின் 'வேளாண்மை' சார்ந்தே உருவாயின. கோட்டம் என்ற பெரும் பிரிவு, 'கோடு' (குளக்கரை) என்ற சொல்லிலிருந்து தோன்றிய கோட்டகம்32 என்ற சொல்லின் திரிபாகவோ, தோட்டம் எனப் பொருள்படும் சொல்லாக பிங்கல நிகண்டு குறிப்பிடும் 'கோட்டம்'33 என்ற சொல்லிலிருந்தோ உருவாகியிருக்க வேண்டும். குறிப்பாக, தோட்டப்பயிர் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டே கோட்டம் என்ற நாட்டுப் பிரிவு தோன்றிற்று எனக் கொள்வது பொருத்தமாகும். தண்டலை என்ற சொல் (தண்மை+தலை) குளிர்ந்த நீர்ப்பெயல் என்று பொருள்படும்.34 சோலைகளும், தோட்டங்களும் மேகங்களை ஈர்த்து மழை பொழியவைக்கும் என்ற கருத்து, கண்ணனின் கோவர்த்தன கிரி குறித்த பாகவதக் கதையாலும், மகாமேகவன ஆராமம் குறித்த மகாவம்சக் (11:2-3) குறிப்பாலும் தெரியவருவது போன்றே, காமாட்சியன்னையால் தழுவப்பெற்றுக் குழைந்த ஏகம்பர் குறித்த கதையாலும்35 குறிப்பால் உணர்த்தப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே வேளாளர் என்றால் காராளர் என்ற சமன்பாடும், காராளர் என்றால் மேகங்களை ஆள்பவர் என்ற கருத்தும் கதையும் உருவாயின என நாம் முடிவு செய்யலாம். தொண்டை மண்டலக் கோட்டங்களுக்கு 'வேலங்'களும், தண்டலைகளுமே அடிப்படையாக அமைந்திருந்தன என்ற வரலாற்று உரிமையை இக்கதை உணர்த்துகிறது.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

1. “பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள்” எ. சுப்பராயலு, எம்.ஆர். ராகவ வாரியர், முதற்கல்வெட்டு, வரிகள் 11,14,15,16, ஆவணம், இதழ் 1 – பக்.68, அக்டோபர் 1991, தமிழகத் தொல்லியல் கழகம்.
கி.பி. 8ஆம் நூற்றாண்டிற்குரிய ஜடில பராந்தக நெடுஞ்சடையனின் வேள்விக்குடிச் செப்பேட்டில் வரி. 124-125இல் “காராண்மை மீயாட்சி” குறிப்பிடப்படுகிறது. பக்.30, பாண்டியர் செப்பேடுகள் பத்து, தமிழ் வரலாற்றுக் கழகம், மறுபதிப்பு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-113, 1999.

2. நந்திவர்ம பல்லவ மல்லனின் கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்குரிய காசாக்குடி செப்பேட்டில் (வரி. 108-109) ஊற்றுக்காட்டுக் கோட்டத்துக் கொடுகொள்ளி என்ற ஊரை “சேட்டி றெங்க சோமயாஜி”, (சம்ஸ்கிருதத்தில் “ஜேஷ்டபாத சோமயாஜி” – வரி. 93) என்பவர்க்குத் தானமாக வழங்கிய செய்தி குறிப்பிடப்படுகிறது. இவர் தொண்டை நாட்டைச் சேர்ந்தவரே. இவரது பெயராகிய சேட்டி றெங்க சோமயாஜி என்பது, “சேட்டிருங்கோ சோமயாஜி” என்பதன் திரிபாகவே இருக்க வேண்டும். “தாரணி யானைச் சேட்டிருங்கோவே” என்பது புறநானூற்று வரி. (201:13.) மூத்த இருங்கோ என்பது இதன் பொருள். இம்மன்னனால் செய்விக்கப்பட்ட சோமயாகத்தில் முதன்மையான பங்கேற்று “சேட்டிருங்கோ சோமயாஜி” என்று பெயர் பெற்ற ஒருவரின் வம்சத்தவரே சேட்டி றெங்க சோமயாஜி போலும். இடைப்பட்ட காலத்தில் நேர்ந்த ஒலித்திரிபால் “சேட்டி றெங்க” என உச்சரிக்கப்பட்டு, “ஜேஷ்ட பாத” (பாது = இறங்கு) என சம்ஸ்கிருதத்தில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டது எனத் தோன்றுகிறது. (பக். 165-166, பல்லவர் செப்பேடுகள் முப்பது, தமிழ் வரலாற்றுக் கழகம், மறுபதிப்பு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-113, 1999.)

3. உருத்திரங்கண்ணனார், தமது மற்றோர் இலக்கியமான பட்டினப்பாலையிலும், புகார் நகரிலிருந்த பௌத்த, சமண சமய நிறுவனங்கள் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.

4. பக். 239, பத்துப்பாட்டு, மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், உ.வே.சா. பதிப்பு, 1974.

5. “துடவை” புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரிலுள்ள கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்குரிய முத்தரையர் கல்வெட்டொன்றில் குறிப்பிடப்படுகிறது. (Inscriptions of Pudukkottai State – No. 237.)

6. தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணையியல் நூற்பா. 5.

நாகுமுலையன்ன நறும்பூங்கரந்தை
விரகறியாளர் மரபிற் சூட்ட
நிறையிவண் தந்து நடுகல்லாகிய
வென்வேல் விடலை
- என்ற புறநானூற்றுப் பாடல் (261) இதற்கு எடுத்துக்காட்டாகும்.

7. கரந்தை சூடியும் பாற்கடற் கள்வனும்
நிரந்தரம் பகை நீங்கினரோ எனும்
(கம்பராமாயணம், யுத்த காண்டம், இராவணன் சோகப் படலம், பா. 11.) கரந்தை என்பது திருநீற்றுப் பச்சிலையாகும்.

8. Epigraphia Indica, vol. XVIII, No. 2 - விளக்கத்திற்குப் பார்க்க: பக். 108, தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி, முதல் தொகுதி, பதிப்பு: சாந்தி சாதனா, சென்னை-28, 2002. “ஊரன்” என்பது “ஊரான் நிலைமைக்காரன்” என்ற தொடரின் வடிவில், கி.பி. 18 ஆம் நூற்றாண்டைய குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம்) கல்வெட்டில் இடம் பெறுகிறது. (Annual Report on Epigraphy 271/1941.)

9. அறுவடை முடிந்து நெற்போர் குவிக்கப்பட்டு அவற்றின்மேல் சிலந்தி கூடு கட்டிய பின்னர்தான் மாடுகளை விட்டுப் போரடித்தனர். (வரி. 234-238.) எனவே, சித்திரையில் அறுவடையும் ஆனியில் போரடித்துத் தூற்றுதலும் நிகழ்ந்தன போலும்.

10. p. 514, A Students’ Sanskrit – English Dictionary, V.S. Apte, Motilal Banarsidas Publishers, New Delhi, 1968.

11. மகாவம்சம் 7:2; 21:31. (p.55, 144, Mahavamsa, Wilhelm Geiger, Asian Educational Service, 2003.)

12. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகச் சேகரிப்பிலுள்ள செங்கல்பட்டு மாவட்ட ஓலைச் சுவடிக் கணக்குக் கட்டு – எண். 57, மேற்கோள்: “செங்கற்பட்டு மாவட்ட ஆவணங்கள்” – புலவர். பா. கண்ணையன், 'கல்வெட்டு', இதழ் 66, ஏப்ரல் 2005. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை-8.

13. 'செறு' என்ற சொல், தொண்டை மண்டலத்துக்குரிய, கி.பி. 6ஆம் நூற்றாண்டைய பள்ளன் கோயில் செப்பேட்டில் வரி. 59-60இல் இடம்பெற்றுள்ளது. (பக். 29, பல்லவர் செப்பேடுகள் முப்பது, தமிழ் வரலாற்றுக் கழகம், மறுபதிப்பு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-113, 1999.) கருங்கை வினைஞர் (வரி. 223), வினைஞர் (வரி. 231), மடியா வினைஞர் (வரி. 254 -255) ஆகிய சொல்லாட்சிகள் பெரும்பாணாற்றுப்படையில் மருத நில உழவர்களைக் குறிப்பதற்கு ஆளப்பட்டுள்ளன. “வலிய கையால் தொழில் செய்வார்”, “தொழில் செய்வார்”, “தொழிலொழிந்திராத தொழில் செய்வார்” என இவற்றுக்கு முறையே பொருள் கூறுவார் நச்சினார்க்கினியர் (பக். 233-235, பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் – உ.வே.சா பதிப்பு, 1974.)

14. பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய் போல்
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கை வருட
வெள்ள நீரிரு மருங்கு கால்வழி மிதந்தேறிப்
(பெரிய புராணம், மும்மையால் உலகாண்ட சருக்கம், பா. 132.)

15. “பண்டைத் தமிழகத்தில் இந்திர வழிபாடு” என்ற எனது கட்டுரையில் இது குறித்து விவாதித்துள்ளேன். பார்க்க: 'தமிழினி', இதழ் 6, ஜூன் 2008.

16. சிலப்பதிகாரம் 11:29; இக்கதை, உக்கிரபாண்டியன் மேகங்களைச் சிறை செய்த புராணக் கதையாகத் திருவிளையாடற் புராணத்தில் விவரிக்கப்படுகிறது. சோழ மன்னன் இந்திரனின் அருள்பெற்று, உரிய பருவத்தில் மழை பெய்ய வரம் பெற்றான் என்பது இப்புராணக் கதையின் முற்பகுதி. இம்முற்பகுதிக் கதை, திரிந்த வடிவில் மகாவம்சத்தில் (21: 27-33) இடம்பெறுகிறது.

17. “வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்” என்ற எனது நூலில் (பக். 207-208) இது குறித்த எனது பொருள் கோடல் தெரிவிக்கப்பட்டுள்ளது (பதிப்பு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-113, 2004.)

18. ப. 132, மர இனப் பெயர்த் தொகுதி, தொகுதி 1, தொகுப்பு: பெ. மாதையன், எச். சித்திர புத்திரன், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1986. (சீவக சிந்தாமணி 355ஆம் பாடலுக்கான குறிப்புரையில் உ.வே.சா. இந்நெல்வகை பற்றிய விவரத்தைத் தெரிவித்துள்ளார்.)

19. ..... ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பு நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் நிறை விளைந்த களக் கொள்வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்
... பொருப்பன் நன்னாடு (புறம் 33)

20. “இந்தியப் பண்பாட்டு உருவாக்கத்தில் பசுவின் புனிதம்” என்ற தலைப்பிலமைந்த பக்தவச்சல பாரதி அவர்களின் கட்டுரை – “பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்” – பாகம்-2, மர்வின் ஹாரிஸ், தமிழில்: துகாராம் கோபால்ராவ் – நூலின் பின்னிணைப்பு. பதிப்பு: எனி இந்தியன் பதிப்பகம், சென்னை-17, 2006.

21. சமண சமயத்தில் நாகராஜன், பார்சுவநாதர்க்குச் சாமரம் வீசும் பணியாளாகச் சித்திரிக்கப்படுவதால் தனது ஆயுதமான ஏர்க் கலப்பையுடன் காட்சியளிப்பதில்லை. ஆனால், தரணேந்திரன் என்ற பெயரில் தரணி (பூமி) இடம்பெறுவது விவசாயம் தொடர்பான குறியீடு என்பதோடு, அவன் பூமியைத் தாங்கும் ஆதிசேஷன் அம்சத்தை உடையவன் என்பதையும் உணர்த்தும்.

22. p. 533, A Students’ Sanskrit – English Dictionary, V.S. Apte, Motilal Banarsidas Publishers, 1968.

23. p. 3838, Tamil Lexicon, Madras University, 1982.

24. p. 533 A students’ Sanskrit – English Dictionary, V.S.Apte, Motilal Banarsidas Publishers, 1968.

25. பக். 120, பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்.

26. சிறுபாணாற்றுப்படையில் இத்தகைய நிலக்கொடை குறிப்பிடப்படவில்லை.

27. பார்க்க: உ.வே.சா. குறிப்புரை, பக். 112, பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும், உ.வே.சா. பதிப்பு, 1989. கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள், “பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்” என்ற தமது நூலில் இதை அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

28. பக். 156, சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும், அடியார்க்குநல்லார் உரையும், உ.வே.சா. நூலகப் பதிப்பு, 2008.

29. “புதுமணம் வதுவை புதுநலம் கடியே”, அபிதான மணிமாலை 2072, பக். 238, அபிதான மணிமாலை – திருவம்பலத்திள்ளமுதம் பிள்ளை இயற்றியது. பதிப்பு: சு. பாலசாரநாதன், உ.வே.சா. நூலகப் பதிப்பு, சென்னை-90, 1988. தொல்காப்பியம் களவியலில் (பொருளதிகாரம் 93ஆம் நூற்பா) “மிக்கோனாயினும் கடிவரையின்றே” எனக் கூறப்பட்டுள்ளது. தலைவன், தலைவியைவிட குடி முதலியவற்றால் உயர்ந்தோனாக இருந்தாலும் களவு மணம் விலக்கப்படாது என்பது பொருள்.

30. பாண்டிய மன்னனின் அந்தப்புரம், ”பீடுகெழு சிறப்பின் பெருந்தகையல்லது ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பு” என நெடுநல்வாடையில் (வரி. 106-107) குறிப்பிடப்படுவது ஒப்பிடத்தக்கது.

31. புலவர் செ.இராசு, கொடுமணலில் சேகரித்த ஓலைச்சுவடி. (மூலனூர் தொண்டைமானுக்குப் பட்டம் கட்டினது.)

32. சீவக சிந்தாமணி, பா. 41, கோட்டகம் என்பதற்குப் பயிருடைத்தான நீர்நிலை என்றே நச்சினார்க்கினியர் பொருள் கூறுவார். (பக். 28, சீவக சிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியருரையும், உ.வே.சா. நூலகப் பதிப்பு, 1969.) 'குளக்கோடு' பெரும்பாணாற்றுப்படையில் (வரி. 273) குறிப்பிடப்படுவது இதனுடன் இணைத்து சிந்திக்கத்தக்கது.

33. p. 1173, Tamil Lexicon, Madras University, 1982.

34. “வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருதிரங்கும் மல்லற் பேர்யாறு” - புறம் 192:7-8.

35. பெரிய புராணம் – மும்மையால் உலகாண்ட சருக்கம், பா. 172-173. (காமாட்சியன்னை புரிந்த பூசனையின் விளைவாகப் பெருமழை பெய்து கம்பையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்த நிகழ்வு.)

(நன்றி: தமிழினி ஜூலை - ஆகஸ்டு 2010.)


SISHRI Home