Friday, August 27, 2010

மனிதர்கள்

முகங்கள்: ""பிறருக்காக வாழ்வதே வாழ்க்கை''

நீதி. செஙகோட்டையன்
First Published : 22 Aug 2010 04:30:00 PM IST

Last Updated : 22 Aug 2010 04:33:40 PM IST

சுயநலம் எனும் பிணி மனித சமுதாயத்தை ஆட்கொண்டுள்ளதால் அதன் பாதிப்புக்குள்ளாகாத மனிதர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. தான், தனது குடும்பம் என்ற மனநிலையுடைய மனிதர்கள் நிறைந்துள்ள இச் சமுதாயத்தில் தங்களது வாழ்வை பிறருக்காகவே அர்ப்பணித்துக் கொண்டுள்ளோரும் ஆங்காங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதற்குப் பல்குணனும் சான்று.

கேரளத்தின் கள்ளிக்கோட்டை மாவட்டத்தில் மடப்பள்ளி கிராமத்தில் பெரிய குடும்பத்தில் பிறந்தவர் பல்குணன். பள்ளி பருவத்திலேயே பெற்றோர்கள் தன் செலவுக்குத் தரும் சில்லறை காசுகளை சேர்த்துவைத்து தன்னுடன் பயின்ற ஏழை, எளிய மாணவர்களின் கல்விச் செலவுக்கு உதவத் தொடங்கி, "பிறருக்காக வாழ்வதற்கே நாம் பிறந்துள்ளோம்' என்ற உயர்ந்த குணத்தை மனதில் விதையாய் விதைத்து வளர்க்கத் தொடங்கினார்.

கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் காலச் சக்கரத்தின் சுழற்சியில் தமிழகத்துக்கு வந்து சேர்ந்த அவர், சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் மலையாள ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

பள்ளியில் பணிபுரியும் போதே மாலை நேரத்தில் அருகில் குடிசைப் பகுதியில் வசிக்கும் ஏழைக் குழந்தைகளுக்குப் பாடம் எடுத்தல், ஆதரவற்றோர், முதியோர், ஊனமுற்றோருக்கு தன்னால் எந்த வகையில் உதவ முடியுமோ அந்த வகையில் உதவி வந்த பல்குணன், பணி ஓய்வுக்குப் பின்னர் ஏழை மாணவர்களுக்குக் கல்விக் கண் திறந்து வைப்பதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று கல்வி கற்க வாய்ப்பில்லாத மாணவர்களுக்குக் கல்விக் கண் திறந்து வைப்பதையே தனது நோக்கமாகக் கொண்டுள்ள பல்குணன், இதற்காக "லேண்ட்மார்க்' என்ற சமுக சேவை அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த அமைப்பின் மூலம், பிரதிபலனை எதிர்பாராமல் சேவை செய்பவர்களை ஒருங்கிணைத்து கல்விக்காக ஏங்கும் சிறார்களுக்கு உதவிக்கரம் நீட்டிவருகிறார்.

தனது சேவை அமைப்பின் முதல் பணியாக சிந்தாதிரிப்பேட்டையில் வாழும் நூற்றுக்கணக்கான குடிசை வாழ் மக்களின் குழந்தைகளுக்குக் கல்வி போதித்து வருகிறார்.

வாழ்வில் திருமணத்தை ஒதுக்கித் தள்ளி, இந்தச் சமுதாயத்துக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் பல்குணனைப் பற்றி கேள்விப்பட்டதும் அவரை பார்க்க வேண்டும் என்ற ஆவல் நமக்குத் தோன்றியது.

அந்திசாயும் வேளையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ஏழைக்குழந்தைகளுக்கு மத்தியில் நீண்டதாடியுடன் அமர்ந்து உற்சாகமாக கல்வி கற்பித்துக்கொண்டிருந்த பல்குணனைச் சந்தித்தோம்....

பிறருக்கு உதவி செய்ய எத்தனையோ வழிகள் இருக்கையில் ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

கல்விதான் ஒரு மனிதனுக்கு அழியாத சொத்து. நல்ல கல்வியால் மட்டுமே நாளைய நல்லதோர் சமுதாயத்தைப் படைக்க முடியும். அப்படியே இருந்தாலும் பிறருக்கு உதவும் அளவுக்கு என்னிடம் பொன்னோ பொருளோ இல்லை. என்னிடம் உள்ள ஒரே செல்வம் கல்விதான். இதன் மூலம் பிறருக்கு என்னால் எந்த வழியில் உதவ முடியுமோ அதைத்தான் நான் செய்து வருகிறேன்.

உங்கள் சேவை அமைப்பு மூலம் கல்வி கற்பிக்க முதலில் சிந்தாதிரிப்பேட்டையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

இதற்கென்று தனிப்பட்ட காரணம் ஒன்றுமில்லை. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை குடிசை வாழ் மக்களின் வாழ்க்கை குறித்து கேள்விப்பட்டேன். அங்கு சென்று பார்த்த போது அவர்களின் நிலை பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. அங்கு வசிக்கும் குழந்தைகளின் கல்வி நிலை கண்டு வேதனை அடைந்தேன். இதையடுத்துதான் அவர்களுக்கு கல்வி புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

சிந்தாதிரிப்பேட்டையில் எவ்வளவு நாளாக கல்வி கற்பிக்கிறீர்கள்? எத்தனை மாணவர்கள் உங்களிடம் படிக்கிறார்கள்?

கடந்த ஓராண்டாக கற்பித்து வருகிறேன். சுமார் 100 மாணவர்கள் படிக்கின்றனர். அனைவருமே இப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில்தான் படிக்கின்றனர். நான் முதன் முதலாக இங்கு பாடம் எடுக்க வந்த போது 10-ம் வகுப்பு படிக்கும் சில மாணவர்களுக்கு ஏ,பி,சி,டி கூட தெரியாமல் உள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

இதுபோன்ற மாணவர்களுக்கு தினசரி பாடம் எடுப்பது தவிர்த்து, அடிப்படைக் கல்வியையும் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினேன். இப்போதெல்லாம் இவர்கள் ஆங்கிலத்தை தலைகீழாகப் படிக்கும் அளவுக்கு தேறிவிட்டனர். இது உண்மையிலேயே மனதுக்கு மகிழ்ச்சியாக இருகிக்கிறது.

கல்வி கற்பித்தல் தவிர்த்து ஏழை மாணவர்களுக்கு வேறு எந்தவிதத்தில் உதவுகிறீர்கள்?

எனக்கு மாதம் குறைந்த அளவு ஓய்வூதியம் வருகிறது. நான் சிந்தாதிரிப்பேட்டையில் தங்கியிருக்கும் அறைக்கான வாடகை, சாப்பாட்டுச் செலவு போக ஒவ்வொரு மாதமும் சில நூறு ரூபாய் எனக்கு மிச்சமாகும். அந்தப் பணத்தை ஏழை மாணவர்களுக்கு தேவையான நோட்டு, புத்தகம் உள்ளிட்ட கல்விச் செலவுக்காக உதவி வருகிறேன். சிந்தாதிரிப்பேட்டையில் சுகாதாரமில்லாமல் இருப்பதால் மாணவர்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. இதுபோன்ற தருணத்தில் என்னால் முடிந்தவரை அவர்களுக்கான மருத்துவச் செலவை ஏற்கிறேன்.

உங்கள் சேவைப் பணியில் யாரெல்லாம் உங்களுக்கு உறுதுணையாக உள்ளனர்?

எத்தனையோ நல்லவுள்ளங்கள் என்னுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் இளம் வழக்கறிஞர்கள் சிலர் அவர்களது பணிச்சுமைக்கு நடுவிலும் சிந்தாதிரிப்பேட்டைக்கு வந்து மாணவர்களுக்கு ஆர்வமுடன் சொல்லிக் கொடுக்கின்றனர். சேவை மனப்பான்மையுடைய சிலர் மாணவர்களுக்கு தேவையான உடை, நோட்டு, புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.

சரி, நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?

நாம் இந்தச் சமுதாயத்துக்காக வாழப்போகிறோம் என்று கல்லூரி படிக்கும்போதே முடிவெடுத்தேன். எனது இந்த வாழ்க்கைப் பயணத்தில் திருமணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று கருதினேன். இதனால் திருமணத்தை ஒதுக்கிவிட்டு சமூக சேவையில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். சமூக சேவையை நான் கடமையாகவே நினைக்கிறேன். எனது கடமையை தவறாமல் செய்வதில் திருப்தி அடைகிறேன்.

நாலுபேருக்கு நல்லதை செய்துவிட்டு தினசரி படுக்கை அறைக்கு செல்லும்போது மன நிறைவாகவும், நிம்மதியாகவும் உள்ளது. இறுதி மூச்சுவரை இதேபோன்று பிறருக்காக வாழுவதற்கான தெம்பை அளிக்க வேண்டும் என்றே தினசரி ஆண்டவனிடம் மண்டியிட்டு வேண்டிக் கொள்கிறேன்.

No comments: