Friday, August 27, 2010

மனிதர்கள்

உதவி: தாத்தா காட்டிய வழியில்..!உதவி: தாத்தா காட்டிய வழியில்..!

ந.ஜீவா
First Published : 22 Aug 2010 04:21:00 PM IST

Last Updated :

மனைவியுடன் வி.என். சிதம்பரம்
சிலர் மிகவும் வசதி படைத்தவர்களாக இருப்பார்கள். ஆனால் யாருக்கும் எந்த உதவியும் செய்யமாட்டார்கள். தானுண்டு தன் பணமுண்டு என்று இருப்பார்கள். சிலரோ வசதி அதிகமாக அதிகமாக பிறருக்குத் தம்மால் முடிந்த அளவுக்கு உதவி செய்வார்கள்.

""நான் இவ்வளவு சிரமப்பட்டு பணம் சம்பாதித்தேன், யாருக்கும் தரமாட்டேன் என்று நினைப்பவர்கள் மத்தியில் என் தாத்தா வள்ளியப்பச் செட்டியார் தான் பணம் சம்பாதிப்பதே சுற்றியுள்ளவர்களுக்குக் கொடுத்து உதவத்தான் என்று நினைத்தார். அவர் வழியைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம்'' என்கிறார் சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டர் நிறுவனர் வி.என்.சிதம்பரம்.

தனது தியேட்டரில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்கும், நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் இந்த ஆண்டு கல்வி கற்பதற்கான உதவித் தொகையை அவருடைய நிறுவனத்தின் சார்பில் வழங்கியிருக்கிறார்.

அவரிடம் பேசியதிலிருந்து...

எந்த வகையில் உங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு உதவுகிறீர்கள்?

நான் சென்னையில் கமலா தியேட்டரை 1972 ஆம் ஆண்டு ஆரம்பித்தேன். 38 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. சமீபத்தில் 39 ஆம் ஆண்டு விழா நடந்தது. அந்த விழாவில் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கினோம்.

தியேட்டர் லாபத்திலிருந்து இதற்காக ஐந்து லட்சம் ரூபாயை ஒதுக்கினோம். அதில் மூன்று லட்சம் ரூபாயை தியேட்டரில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகையாக வழங்கினோம்.

மீதமுள்ள 2 லட்சம் ரூபாயை மிக நன்றாகப் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவித் தொகையாக வழங்கினோம்.

அதுமட்டுமல்ல, எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இலவச மதிய உணவு, சீருடை போன்ற பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறோம். நாம் சம்பாதிப்பதில் சிறிதாவது பிறருக்குப் பயன்படட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் இதைச் செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.

நன்றாகப் படிக்கும் ஏழை மாணவர்களுக்குக் கல்வி கற்க உதவி செய்ததாகச் சொன்னீர்கள். எந்த அடிப்படையில் அந்த மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

மதுரையில் கட்டட வேலை செய்து கொண்டிருந்த ஒருவரின் மகளுக்கு மேற்படிப்புக்கு உதவி செய்தோம். அந்தக் கட்டடத் தொழிலாளி ஒரு விபத்தில் கால்களை இழந்துவிட்டவர். அந்தத் தொழிலாளியின் மனைவி அவரையும், குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு, வீட்டை விட்டுப் போய்விட்டார். அவருடைய குழந்தைகளைக் காப்பாற்ற பிச்சையெடுப்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. இவ்வளவு கஷ்டத்திலும் அவர் தனது மகளைப் படிக்க வைத்தார். அவருடைய மகள் மீனா மதுரை, சின்ன சொக்கிகுளத்தில் உள்ள காக்கைபாடினியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்தார். அவர் மாவட்ட அளவில் 3 வது ரேங்க் எடுத்தார். புவியியல் படிப்பில் மாநிலத்தில் முதலாவதாகத் தேறினார். இதைக் கேள்விப்பட்டு அவருக்கு நாங்கள் இந்த ஆண்டு மேற்படிப்பிற்காக உதவி செய்திருக்கிறோம். நாங்கள் உதவி செய்ததைக் கேள்விப்பட்டு மதுரை ஆட்சியர் அவர்களுக்கு வீட்டு வசதி வாரிய வீடு கிடைக்க உதவி செய்திருக்கிறார்.

நாங்கள் கல்விக்காக உதவி செய்த இன்னொரு மாணவர் குமார். அவர் மதுரை தெற்குவாசலில் உள்ள நாடார் வித்யாசாலைப் பள்ளியில் படித்தவர். பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவராகத் தேறினார். மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். அவருடைய தந்தை கைவண்டி இழுக்கும் தொழிலாளி. அவருக்கு அம்மா இல்லை.

இப்படி மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்த மிகவும் நன்றாகப் படிக்கும் மாணவர்களைத் தேடிப் பிடித்து அவர்களுக்குப் படிக்க உதவி செய்கிறோம்.

இப்படி உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?

நாம் இந்த சமுதாயத்தில் வாழ்கிறோம். இந்தச் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டும். எங்களுக்கு முன்னோடியாக என் தாத்தா வள்ளியப்பச் செட்டியார் இருந்திருக்கிறார். என் தாத்தா மிகவும் ஏழை. அன்றாடம் சாப்பாட்டுக்கே கஷ்டம். 1905 இல் அவர் பணம் சம்பாதிப்பதற்காக மலேயா, பினாங்கு சென்றிருக்கிறார். அந்தக் காலத்தில் 18 ரூபாய் கொடுத்தால் நாகப்பட்டினத்தில் இருந்து மலேயாவுக்கு எந்தவிதப் பாஸ்போர்ட்டும் இல்லாமல் சென்றுவிடலாமாம்.

அப்படி பணம் சம்பாதிப்பதற்காகச் சென்றவர், சில வருடங்களிலேயே மிகப் பெரிய பணக்காரர் ஆகிவிட்டார். கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்டார். அவருக்கு மலேயாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் ரப்பர் தோட்டங்கள் இருந்தன.

ஆனால் எப்போதும் 4 முழ வேஷ்டியோடும் 5 முழத் துண்டோடும்தான் காட்சியளிப்பார். ரொம்ப எளிமையாக இருப்பார். "பணம் வரும், போகும். இடையில் ஆடாதே' என்பார். உடம்பு சரியில்லாமற் போய்விட்டால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான ராங்கியத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் 100 தேங்காய் உடைப்பார். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்வார்.

அவருக்கு நெருக்கமானவர்கள் உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிடம் போனால் போதாதா? இப்படி எல்லாருக்கும் சாப்பாடு போடுகிறாயே? என்று கேட்பார்கள்.

அதற்கு அவர், சாப்பிடுபவரில் யாராவது ஒருவர் நான் நல்லா இருக்க வேண்டும் என்று வாழ்த்தினால், அது பலிக்குமல்லவா? என்று திருப்பிக் கேட்பார். அதைப் பார்த்துப் பழகிய எனக்கு நாமும் அவரைப் போலப் பிறருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

அதனால்தான் எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், காண்ட்ராக்ட் ஊழியர்களுக்கும் கூட இலவச மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தினேன்.

எதிர்காலத்தில் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

இந்த ஆண்டு 5 லட்சம் ரூபாயை உதவி செய்வதற்காக ஒதுக்கியிருக்கிறோம். அடுத்த ஆண்டு முதல் இதைப் பத்து லட்சம் ரூபாயாக அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். இதற்கெல்லாம் நான் வணங்கும் மதுரை மீனாட்சி அருள்புரிவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நான் எதிர்பாராத பல நல்ல விஷயங்கள் மீனாட்சி அம்மனின் அருளால் எனக்கு நடந்திருக்கிறது.

நான் சிவாஜிகணேசனின் நெருங்கிய நண்பன். அவருடன் எனக்கு 30 வருட நட்பு. வடபழனியில் ஷூட்டிங் வரும்போது கொஞ்ச நேரம் கிடைத்தாலும் என்னைப் பார்க்க வந்துவிடுவார். குடும்ப நண்பர். ஆனால் எம்.ஜி.ஆரிடம் அவ்வளவு நெருக்கம் கிடையாது.

எம்.ஜி.ஆர். அவருடைய ஆட்சிக் காலத்தின்போது 1980 இல் என்னை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் அறங்காவலர் குழுத் தலைவராக நியமித்தார். மூன்று ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்தேன். அதற்குப் பின் ஆறு ஆண்டுகள் தக்காராக இருந்தேன். அந்த ஒன்பது ஆண்டுகளும் என்னால் மறக்க முடியாதவை. மதுரைக் கோயிலுக்கு வரும் பெரிய பெரிய தலைவர்களுடன் எல்லாம் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் முதல் பிரதமர் ராஜீவ் காந்தி வரை பலருடன் பேசும், பழகும் வாய்ப்பு மீனாட்சி அம்மனின் அருளால் எனக்குக் கிடைத்தது. மேலும் நான் மக்களுக்குச் சேவை செய்ய மீனாட்சி அம்மன் அருள்புரிவார் என்ற நம்பிக்கை உள்ளது.

நான் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் எனது மகன்கள், மனைவி கமலா ஆகியோரின் அன்பான ஒத்துழைப்பு இருப்பது எனக்குக் கூடுதல் பலம்.

No comments: