Wednesday, July 28, 2010

மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு

எழுதப்படாத சரித்திரம் 28
‘‘மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு!’’




‘தை’ முதல் நாளை புத்தாண்டின் முதல் நாளாகக் கொண்டாடச் சொல்கிறது அரசு. நமக்கு அதில் மாறுபாடில்லை. தமிழர் வரலாற்றில் பொங்கல் நாள், உழவர் நாளாகவே இருந்து வந்திருக்கிறது. உழவர் நாள், ‘மள்ளர்’ நாள் என்றால் அது இன்னும் கூடுதல் பொருத்தமாகவே இருக்கும்.

மள்ளர்களைப் பள்ளர்கள் என்று பிற்கால, நாயக்கர் காலத்துச் சிற்றிலக்கியங்கள் சொல்கின்றன. சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன. சங்க காலத்தில் இன்று பள்ளர் என்று தவறாகக் கூறப்படும் மக்களுக்கு, ‘மள்ளர்’ என்ற பெயரே இருந்திருக்கிறது. அண்மைக்காலமாக இந்த மக்கள், தங்களை தேவேந்திர குல வெள்ளாளர் என்று அழைத்துக்கொள்கிறார்கள். அழைக்கப்படுகிறார்கள். அதன் வரலாற்றை ஆராய்வோம். தமிழர்கள், சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள். தங்கள் வாழ்நிலங்களை நான்கு வகையாகப் பிரித்தார்கள். மலை மற்றும் மலைசார்ந்த நிலப்பரப்பைக் குறிஞ்சி என்று அழைத்தார்கள். அந்த நிலத்தில் மலரும் பூக்களில் சிறப்பு பொருந்தியது குறிஞ்சிமலர். மலையைவிட்டு, வாழ்வாதாரம் தேடிக் கீழே வந்தவர்கள், காட்டுப்பகுதியைக் கண்டடைந்தார்கள். அந்நிலத்துச் சிறந்த பூவின் பெயரால் அது முல்லை என்றாயிற்று. கடற்கரை மக்கள், தங்கள் பகுதிக்கு அந்நிலத்து நெய்தலைக் கண்டு, அதற்கு நெய்தல் நிலம் என்று பெயர் கொண்டார்கள்.

காட்டை அடுத்துள்ள, சமதளமும், ஆற்றங்கரைக்கு அழகாகவும் உள்ள பூமியை அங்கே அடர்ந்து வளர்ந்துள்ள மருத நிலத்தின் பெயரால் வழங்கினார்கள். ஆற்றுப் பாசனத்தின் உதவியுடன், நெல் விவசாயத்தை மருத நிலத்துக்குக் குடி பெயர்ந்தவர்கள் கண்டுபிடித்தார்கள். மனித குல முன்னேற்றத்தைச் சாத்யமாக்கியது மூன்று கண்டுபிடிப்புகள். முதலில் நெருப்பு, இரண்டாவது சக்கரம், மூன்றாவது விவசாயம். நிலத்தை உழுது நெல் விதை தூவப்படுவதால், அதைச் செய்தவர்கள் உழவர்கள் எனப் பெயர் பெற்றார்கள். விவசாயத்துக்குச் செயற்கை மற்றும் ரசாயன உரங்களைக் கொடுத்து நிலங்களை அழிக்கும் அரசுகள் அந்தக்காலத்தில் இல்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஒரு மணி நெல், பத்து மணிகளைத் தந்தது. நெல்லை, நாணயமாகத் தந்து மீன் மற்றும் பலசரக்கு வாங்கிக் கொண்டார்கள். வயல் நண்டுகள், ஆமைகள், ஆடுகள், மான்கள் அவர்களின் உணவாயின.

நெல் விவசாயம், இன்றுபோல அறுபது, தொண்ணூறு நாள் அவசரப் பிண்டமாக இல்லை. ஏழு, எட்டு மாதப் பயிர்கள் அவை. சுமார் 35 அல்லது 40 வகை நெல் வகைகளை அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த உழவர்கள், உலகுக்கு அச்சாணிபோல இருந்து உணவு வழங்கும் பெரும்பணியைச் செய்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் அல்லது கூட்டத்துக்கும் அவர்கள் உழைப்பினால், நிறைய நெல் மற்றும் மாடுகள் இருந்தன. மாடு என்றாலே, ‘செல்வம்’ என்று அர்த்தம், தமிழில். இந்தச் செல்வம் பகைக்குக் காரணமும் ஆயிற்று. விவசாயம் மற்றும் பால்வளம், மற்றும் இறைச்சி உணவுக்குக் காரணமாக மாடு பிடிக்கும் போர்முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு கூட்டம், மாடு பிடிக்கும் சண்டையில் இறங்க, மறுகூட்டம் மாடு மீட்கும் போரில் இறங்க, சண்டையும், சச்சரவும், தினவாழ்க்கை ஆயிற்று. ஆகவே, உழவர்கள் தங்கள் உடமைகளைக் காத்துக்கொள்ள போர் வீரர்களாகவும் மாற வேண்டி இருந்தது. அந்த வகையில் உருவான உழவு வீரர்களே மள்ளர்கள் எனப்பட்டார்கள்.

‘மள்ளர்’ என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள்.

‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. இதைவிடத் தெளிவாகப் பிங்கல நிகண்டு, ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது.

இந்தப் போர் வீரர்களில், அதாவது மள்ளர்களில், எல்லோரையும் தன் வீரத்தால் வென்ற பெரிய போர்வீரன், ‘வேந்தன்’ எனப்பட்டான். அவன் மரியாதைக்குரிய மன்னன் ஆகிறான். ‘மள்ளன்’ என்பதே ‘மன்னன்’ ஆகி இருக்கவும் வாய்ப்பு உண்டு. அந்த ‘வேந்தன்’, பின்னால் வந்த மள்ளர்களால், உழவர்களால் வணங்கப்பட்டவனாகிறான். ‘வேந்தன்’, குல முதல்வனாகி, காக்கும் தெய்வமாகவும் ஆகிறான். இதையே தொல்காப்பியம், ‘வேந்தன் மேய தீம்புவை உலகம்’ என்று இலக்கணம் வகுக்கிறது. ‘மேய’ என்பதுக்குத் தகுதியான என்று பொருள். ஆக, மருத நிலத்துக்குத் (தீம்புவைஆற்றங்கரை நிலம்) தகுதியான ஆட்சியாளன் ‘வேந்தன்’ என்கிறது தமிழ் இலக்கணம். இந்த வேந்தர்களின் பரம்பரையே சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள். ‘வேந்தன்’ என்ற சொல்லை இந்த மூன்று பேர் மட்டுமே பெற்றவர்களாகத் தமிழ் இலக்கியத்தில் விளங்குகிறார்கள்-. மற்றவர்கள் ‘வேளிர்’, ‘மன்னன்’, ‘கோ’ என் பெயரிலும் ‘அரசன்’ என்ற பெயரால் மட்டுமே அறியப்பட்டிருக்கிறார்கள்.

‘வேந்தர்’ என்ற சொல், பழைய பெரு மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையே குறிக்கும். இவர்கள் மள்ளர்களிடையேதான் உருவாகி வந்தவர்கள்.

நம் உழவர்ப் பெருங்குடியினராகிய மள்ளர்கள், தேவேந்திரர் எனவும் தேவேந்திர குல வேளாளர் எனவும் குறிப்பிடப்பட என்ன காரணம்?

யார் இந்த தேவேந்திரன்?

ஆரியர்களின் ஆதிக் கடவுள் இந்திரன். அவர்களின் முதல் வேதமாகிய ரிக் வேதத்தில் முப்பது சதவிகிதம் இந்திரன் பற்றிய பாடல்களே ஆகும். ‘எங்களுக்குச் சோறு கொடு, சுராபானம் (சாராயம்) கொடு, எங்கள் எதிரிகளை அழி என்று கேட்டுக்கொள்ளும் பாடல்கள் அவை. இந்திரன், புராணங்களின் படி தேவர்களின் கடவுள். காசிப முனிவரும், அதிதி தேவியும் அவன் பெற்றோர். அவன் மனைவி இந்திராணி. ஆயுதம் வச்சிரம். இந்திரன் பற்றிய வேறு நல்ல தகவல்கள் புராணங்களில் இல்லை. ஆனால், ஆரியர்களின் ஆதி இலக்கியங்களில் அவன் ஒப்பற்ற கடவுளாக இருக்கிறான். எல்லாவற்றுக்கும் மேலே, அவன் மழை, இடி, மின்னல் ஆகியவைகளின் கடவுளாக இருக்கிறான். ஆக, ஆரியர்களின் மழைக் கடவுள் இந்திரனே ஆவார்.

உழவுக்குக் கடவுள் மழையே. தமிழ் மரபில் மழைக் கடவுளாக வேந்தன் இருந்திருக்கிறான். விவசாயம் சார்ந்த சடங்குகளுக்குக் கடவுளும் வேந்தனாகவே இருந்திருக்கிறான். ஆரியக் கலப்பு, தமிழ் பூமியில் ஏற்பட்டு இந்து மதம் கட்டமைக்கப்பட்டபோது, தமிழ் வேந்தனும், ஆரிய தேவவேந்திரனும் ஒன்றிணைக்கப்படுகிறான். தமிழ் முருகனும், வட நாட்டு சுப்பிரமணியனும் ஒன்றிணைந்தபோது, இதுவும் நடந்தது. தமிழ்க் கொற்றவை, சிவனுக்குச் சக்தியாக மாற்றப்படும்போது இதுவும் நடந்திருக்கிறது. ஆக, மள்ளர்களான உழவர்களுக்கு ஆதிக் கடவுள் வேந்தன், பிறகு தேவேந்திரானாகி(தேவ+ இந்திரன்), அவன் வெள்ளாமைக்குக் கடவுளாகி, வெள்ளாமை செய்த உழவர்களான மள்ளர்கள், அவன் நினைவில் தேவேந்திர குல வெள்ளாளராகிறார்கள். பெயர்கள் எதுவானாலும், அவர்கள் பூர்வ, பழைய தமிழர்கள். உழவர்கள். வேளாண்மை செய்தவர்கள்.

வேந்தனாகிய இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கவே, அவன் மழை தந்தமைக்காகப் போகித் திருநாள் கொண்டாடுகிறோம். ‘போகி’ என்ற பெயர் இந்திரனுக்கு உண்டு. தேவலோகத்துப் போகங்களை (சிற்றின்பங்களை) அனுபவிக்கிறவன். அதனால் இந்திரனுக்குப் போகி என்று பெயர். அறுவடைக்கு முந்தைய நாள் இந்திரனுக்கு நன்றி கூறும் நாள். அதுவே போகி.

மறுநாள் பொங்கல் என்று இன்று நாம் சொல்லும் நாள், அறுவடை நாள் ஆகும். புதிய மகசூலைப் பொங்கலாக்கி, சூரியனுக்குப் படைக்கும் நாள், பொங்கல் நாள் ஆகும். ஒரு பக்கம் அறுவடை மறுபக்கம் புது உழவுக்குத் தொடக்க நாளும் ஆகும். வேந்தன் நெறிப்பட்ட தமிழர் மழை வணக்கமும், வேத நெறிப்பட்ட இந்திர வணக்கமும் ஒன்றையொன்று கலந்து, இந்திர விழாவில் முடிந்தன. சங்க காலத்தில் அறிமுகமான இந்திரன், மரியாதைக்குரிய மழைக் கடவுளாக மாறச் சுமார் முந்நூறு ஆண்டுகள் தேவைப்பட்டது. சிலப்பதிகாரம், மணிமேகலை காலமான 1800 ஆண்டுகளுக்குப் பிந்தைய (கி.பி.2ம் நூற்றாண்டு) கால அளவில் இந்திர வணக்கம் தமிழ்ச் சமுதாயத்தில் வேர் ஊன்றியது. இந்திரவிழா பற்றிச் சிலம்பிலும், மணிமேகலையிலும், சான்றுகள் இருக்கின்றன. மள்ளர் ஆட்சி சிறக்கவும், பசி, பிணி, பகை நீங்கவும் இந்திரனுக்குப் பலிகொடுத்துப் பூசிக்கும் வழக்கம் உருவாயிற்று. கோவலன் மாதவி பிரிவே, ஒரு இந்திர விழாவில்தான் நடந்திருக்கிறது.

சங்க காலத்துக்கும் முந்தைய தமிழ் உழவர்களாகிய மள்ளர்கள், பழந்தமிழ் வேந்தன் காலத்திய சடங்குகளை இன்னமும் விடாது செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அச் சடங்குகளில் ஒன்று நாற்று நடவுத் திருவிழா. இது மள்ளரிய நாகரிகத்தின் ஒரு முக்கியச் செயல்பாடு. இந்திர விழாச் சடங்குகளில் இதுவும் ஒன்றாகக் காணப்பட்டாலும், நாற்று நடவுத் திருவிழா சுத்தமான தமிழர் சடங்காகும். வேத நெறியில் விவசாயம் சிறப்பிடம் பெற்றதாக வரலாறு இல்லை.

‘மள்ளரியம்’ எனும் பண்பாட்டுச் சொல்லை உருவாக்கிய அறிஞர் முனைவர் தே.ஞானசேகரன், இதுபற்றிப் பல நூல்கள் எழுதி இருக்கிறார். அவைகளில் இருந்து சில குறிப்புகள் தருகிறேன்.

நாற்று நடவுத் திருவிழா மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று நாற்று விடும் விழா. இரண்டு பொன் ஏர் பூட்டும் விழா. மூன்று நாற்று நடவு விழா ஆகிய அந்தப் பிரிவுகள்.

நாற்று விடும் விழா என்கிற விதை இடும் விழா, ஆனி மாதம் 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. முன்னரே பதப்படுத்தப்பட்ட கழனியில் நெல் விதைகளைப் பரவுதல் நாற்று உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் நெல் விதையை ஊற வைத்து முளைக்க வைக்கும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. விதை நெல்லை ஊற வைக்க ஆற்றிலிருந்து நீர் எடுக்கப்படுகிறது. இது அவர்கள் ஆற்றங்கரை மனிதர்கள் என்பதை நிரூபிக்கும் பழைய ஆதாரம். ஒரு சணல் சாக்கில் நெல் விதைகளைப் போட்டுக் கட்டி, அண்டாவில் போட்டு தண்ணீருக்குள் மூழ்க வைத்து, மறுநாள் முளைத்தவுடன் எடுத்து வைத்துவிடுவது விதை நெல் முளைக்க வைக்கும் சடங்காகும்.

பொன்னேர் பூட்டு விழாவும், நாற்று நடவுத் திருவிழாவும் ஆனி 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் முடிகின்றன. கோயில் குருக்கள் பொன்னால் ஆன நாற்றை நட, மள்ளர் இன மக்கள், ஊர்த் தலைவர்கள் நாற்று நடவைத் தொடங்குகிறார்கள். இவைகள் எல்லாம் சுத்தமான தமிழ்ச் சடங்குகளாகும். மட்டுமல்ல சுமார் மூவாயிரம் ஆண்டுகாலத் தமிழர் விவசாயத் தொல் வழக்கத்தை இன்னும் மள்ளர்கள் கைக் கொண்டிருப்பதைக் காட்டும் சடங்கும்கூட. பழந்தமிழ் சமூக எச்சம் ஒன்று இன்றும் ஜீவித்திருக்கிறது என்பதை இந்த மள்ளர் பெருமக்களின் சடங்குகளில் இருந்தே காணமுடிகிறது.

சரி. மிகப் பெரும் வழக்கத்திலிருந்த இந்திர வணக்கம், தமிழர் வாழ்வில் ஏன் மறைந்து போனது? சைவ, வைணவம்போல் அது நீடிக்காமைக்கு என்ன காரணம்? மேலும், நெல் விவசாயத்திற்கும் மள்ளர் என்கிற தேவேந்திரர்களுக்கும் உள்ள உறவு எத்தகையது-?

சரித்திரம் தொடர்கிறது








பிரபஞ்சன்

8 comments:

Unknown said...

THLITH ULLAIYE IRUNTHUKKUKONDU NAANGAL PALLAR MALLAR THEVENTHIRA VELALAR ENDRU SAATHI VERI PAARPATHU MIKAUM KEVALAM

Unknown said...

saathi illaiyena imanuvel vaithukkondu saathi paarpathuthan pallar samugama

Unknown said...

saathi illaiyena imanuvel vaithukonden saathi paarkiravarkal thane pallar samugam

Unknown said...

saathi illaiyena imanuvel vaithukonden saathi paarkiravarkal thane pallar samugam

Unknown said...

THLITH ULLAIYE IRUNTHUKKUKONDU NAANGAL PALLAR MALLAR THEVENTHIRA VELALAR ENDRU SAATHI VERI PAARPATHU MIKAUM KEVALAM

nalkuditamilan said...

Totally wrong

Unknown said...

Thalith Nee sonna word da enka thalith nu irukku sollu

Unknown said...

Thalith Nee sonna word da enka thalith nu irukku sollu