Tuesday, July 27, 2010

புதிய தமிழகம்

போயஸ் கார்டன் சந்திப்பு, அ.தி.மு.க.வுடன் கூட்டணி அறிவிப்பு என அரசியல் பரபரப்பில் ஒதுங்கியிருந்த புதிய தமிழகம் கட்சி முன்னணிக்கு வந்திருக்கிறது. புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் புதிய தெம்புடன் அ.தி.மு.க. நிர்வாகிகளைச் சந்தித்து சால்வைகள், மாலைகளை பரஸ்பரம் அணிவித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏனிந்த உற்சாகம் என அந்தக் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை சந்தித்துக் கேட்டோம்.

மிக நீண்ட காலமாக அ.தி.மு.க.வின் எதிரணி வரிசையிலேயே இருந்த உங்களுக்கு அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும் அழைப்பு எப்படி வந்தது?

டாக்டர் கிருஷ்ணசாமி : வரலாற்றின் நெடிய பக்கங்களில் எதிர்ப்பு என்கிற சொல் எப்பொழுதுமே ஒரு பக்கமாக உபயோகப்படுத்தப்படுவதில்லை. கடந்த பதினைந்து வருடங்களாக மண்உரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை ஆகிய கோரிக்கை களுக்காக மக்களைத் திரட்டிப் போராடிவரும் இயக்கம்தான் புதிய தமிழகம். இன்று நிலவும் அரசியல் சூழலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என விரும்புகிறோம். அரசியல் மாற்றங்கள் அணிகளாகச் சேர்வதால்தான் நிகழும். அரசியலில் சில விஷயங்கள் சில நேரங்களில் நடந்தேறும். அதுபோலத்தான் இந்த கூட்டணியும் இயற்கையாகவே அமைந்தது.

இந்தக் கூட்டணி தமிழகத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது?

டாக்டர் கிருஷ்ணசாமி : தென் மாவட்டங்களில் முரண்பட்டு மோதிக்கொண்டிருந்த இரண்டு சமூகங்கள் அமைதியான வழியில் ஒன்றிணையும் சமூக ஒற்றுமையை இந்தக் கூட்டணி உருவாக்கும்.

அரசியலில் அ.தி.மு.க.வுக்கு சாதகமான அலையை உங்கள் கட்சியால் உருவாக்க முடியுமா?

டாக்டர் கிருஷ்ணசாமி : நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 76 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மற்ற தொகுதிகளில் வெறும் 3 சதவிகித வாக்குகளில்தான் தோல்வியடைந் திருக்கிறது. அந்த இடைவெளியை எங்கள் கட்சி நிரப்புவதோடு கூட்டணியை வெற்றிக்கு எங்கள் கட்சி அழைத்துச் செல்லும்.

தென் மாவட்டங்களில் 99-களில் நடை பெற்ற இடைத்தேர்தல்களில் அனைத்துத் தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டு 15,000-க்கும் அதிகமான வாக்குகளை ஒவ்வொரு தொகுதியிலும் பெற்ற கட்சி புதிய தமிழகம். 2001-க்குப் பிறகு எந்த ஒரு பெரிய கூட்டணியிலும் நாங்கள் இடம் பெறாததால் எங்களது ஆதரவாளர்கள் சோர்ந்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க. என்கிற பெரிய கூட்டணி எங்களது ஆதரவு பலத்தை பல மடங்கு பெருக்கிவிடும்.

2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் நீங்கள் தி.மு.க. அணியில் சேர்ந்து போட்டியிட்டீர்களே? அப்பொழுது உங்கள் அணி வெற்றிபெறவில்லையே?

டாக்டர் கிருஷ்ணசாமி : அப்பொழுது தி.மு.க. ஆட்சியிலிருந்தது. மக்களின் மனநிலை ஆட்சிக்கு எதிராக இருந்தது. அ.தி.மு.க.-காங்கிரசுடன் கை கோர்த்து ஒரு மெகா கூட்டணியோடு தேர்தலை சந்தித்தது. அந்த பெரு அலைக்கு எதிராக நாங்கள் நீச்சலடித்தோம். எங்கள் அணி வட மாவட்டங்களில் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றபோது, தென் மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் வெறும் நூறு, இருநூறு வாக்குகளில்தான் தோல்வி யடைந்தது.

ஒட்டப்பிடாரத்தில் நான் 600 வாக்கு வித்தியாசத்தில்தான் தோற்றேன். ஆலங் குளத்தில் ஆலடி அருணா, இப்போதைய சபாநாயகர் ஆவுடையப்பன் என பலர் சொற்ப வாக்குகளிலேயே வெற்றி வாய்ப்பை இழந்தார்கள். அந்தத் தேர்தலில் வீசிய பேரலையையே எதிர்த்து நின்று காட்டியது எங்கள் கட்சிதான்.

சமூகக் களத்தில் உங்களது கூட்டணி என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது?



டாக்டர் கிருஷ்ணசாமி : அரசியல்தான் ஒரு சமூகத்தின் அடி கட்டுமானம். அதில் ஒரு மாற்றம் ஏற்படும்போது அதன் மேல் கட்டுமானமாக இருப்பவை தானாக மாறும். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சியுடன் எந்தக் கூட்டணியும் வைக்காத நடிகர் கார்த்திக் தலைமையிலான பார்வர்டு பிளாக் கட்சி நான் போட்டியிட்ட தொகுதியில் என்னை ஆதரிப்பதாக மட்டும் சொன்னார். அங்கிருந்த தேவேந்திரகுல வேளாளர் இன மக்களையும் என்னையும் தேவரின இளைஞர் கள் ஆதரிக்க ஆரம் பித்தனர். நாங்கள் பூஜ்யம் ஓட்டு வாங்கிய முக்குலத்தோர் இன கிராமங்களில் எங்களுக்கு வாக்குகள் பதிவாகி யது.

அ.தி.மு.க.வுடனான இந்த கூட்டணி நம்மை ஒதுக்கு கிறார்கள் என பகை கொண்டிருந்த மக்களை இணக்கமாக அணைத்துக் கொண்டு போகும். யாரும் நினைத் துப் பார்க்க முடியாத சமூக நிகழ்வை நிச்சயம் உருவாக்கும். இனி தென் மாவட்டங்கள் அமைதிப் பூங்காவாக மாறும்.

நீங்கள்தான் கூட்டணி எனச் சொல்கிறீர்கள். அ.தி.மு.க. தரப்பிலிருந்து யாரும் இதுவரை சொல்லவில்லையே?

டாக்டர் கிருஷ்ணசாமி : ஜெ. என்னிடம் மிகவும் அன்புடன் வெளிப் படையாகவே கூட்டணி பற்றி பேசினார். எங்கள் சந்திப்பு பற்றிய செய்திகளை படத்துடன் பத்திரிகைகளில் வரவும் ஏற்பாடு செய்தார். இதுவே கூட்டணிக்கான தொடக் கம்தானே!

No comments: