திருச்சி: திருச்சியில் போலீஸ் பாதுகாப்புடன் சர்ச்சைக்குரிய சுவர் நேற்று இடிக்கப்பட்டது. திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சக்திவேல் காலனியில் இருந்து பின்புறம் உள்ள முத்து மாரியம்மன் கோயில் தெருவுக்கு செல்லும் பாதையில் 150 மீட்டர் நீளம், 9 அடி உயரத்தில் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. இது தீண்டாமை சுவர். இதை இடிக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதே நேரத்தில் இந்த சுவர் தனியாருக்கு சொந்தமானது. இதில் போக்குவரத்து நடைபெறவில்லை என்று மனிதநேய மக்கள் கட்சியினர் தெரிவித்தனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி தொகுதி எம்பி லிங்கம், இந்த சுவரை பார்வையிட்டு தீண்டாமை சுவர் அல்ல என்று கூறினார்.
திருச்சி கலெக்டர் மகேசன் காசிராஜன் உத்தரவுப்படி, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை சர்ச்சைக்குரிய அந்த சுவரை இடித்து போக்குவரத்துக்கு வழி செய்தனர். மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜாமுகமது முன்னிலையில் சுவர் இடிக்கப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர்கள் ரூபேஸ்குமார் மீனா, தமிழ்ச்சந்திரன், உதவி கமிஷனர்கள் ஞானசேகரன், பழனிச்சாமி, சுந்தர்ராஜன் ஆகியோர் இருந்தனர். கமாண்டே பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மவுலானா கூறுகையில், ‘‘இது தீண்டாமை சுவர். சுவர் இருந்த இடம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. 89ம் ஆண்டு வரை இந்த இடம் புது அரிஜன தெரு என்றுதான் ரேஷன் கார்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். பின்னர், திருத்தம் செய்யப்பட்டு முத்துமாரியம்மன் கோவில் தெரு என்று மாறியது.
சுவரை இடிக்கக்கோரி 25 ஆண்டாக போராடி வந்தோம். இந்த சுவரினால் 5 தெருவை சேர்ந்த மக்கள் ஒன்றரை கிமீ சுற்றி செல்ல வேண்டியிருந்தது. சுவர் இடிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார். இடத்தின் உரிமையாளர் சம்சுகனி ராவுத்தரின் தம்பி மகன் அப்துல் ரஹ்மான் கூறுகையில், ‘‘சுவர் இடிக்கப்பட்டது பற்றி மதுரை உயர்நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்ய உள்ளோம்‘‘ என்றார்.
No comments:
Post a Comment